Friday, February 28, 2014

ஸ்டுட்கார்ட் விநாயகர் ஆலயத்தில் மகா சிவராத்திரி

நேற்று இரவு ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள சித்தி விநாயாகர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா நன்கு நடைபெற்றது. பூஜையில் கலந்து கொள்ள மாலை நான் சென்றிருந்த போது எடுத்த சில புகைக்கடங்கள் இதோ... 

Inline image 1
சித்தி விநாயகர் - நடுவில்


Inline image 2
உற்சவ விநாயகர்


Inline image 3
மூகாம்பிகை அன்னை

Inline image 4
நவக்கிரகங்கள் அலங்காரத்துடன்.

சுபா

Wednesday, February 26, 2014

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - இஸ்ரேல் நண்பராக..

பாலஸ்தீனத்துடனான எல்லை சட்ட வரைமுறை செயல்பாடுகளில் இஸ்ரேல் கடைபிடிக்கும் விதிமுறைகளை விமர்சனம் செய்வது கடந்த சில நாட்களில் நிகழ்ந்ததில் ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உள்ள நட்பில் ஒரு டென்ஷனை ஏற்படுத்தியிருக்கின்றது. 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இஸ்ரேலின் மிக அனுக்கமான நாடு ஜெர்மனி. வர்த்தக உடன்பாட்டு அளவில் அமெரிக்கா, சீனா இரண்டுக்கும் அடுத்து மூன்றாவது இடத்தை ஜெர்மனியின் ஏற்றுமதி பொருட்கள் இடம்பிடிக்கின்றன. ஆக நட்பு நிலையில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தால் பொருளாதார ரீதியாக ஏதேனும் சிக்கலை அது உருவாக்கலாம். 

தற்சமயம் சான்ஸலர் திருமதி மெர்க்கல் இஸ்ரேலுக்கு  பயணித்திருக்கின்றார். இஸ்ரேல் சில குறிப்பிட்ட விஷயங்களில் பாலஸ்தீனத்துடன் முறையான சமத்துவமான நடைமுறைகளைக் கடைபிடிக்கவில்லை என்பது தொடர்பான விஷயங்களே தற்சமயம் ஒரு வித அதிருப்திகரமான சூழ்நிலைக்கு ஆரம்பமாக அமைந்து விட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜெர்மனிக்கான பிரதினிதிகளின் தலைவர் திரு.ஷூல்ட்ஸ் தனது அண்மைய ராமாலாவிற்கான விஜயத்தின் போது ஒரு பாலாஸ்தீனிய இளைஞன் கூறிய ஒரு செய்தியை ஐரோப்பிய ஒன்றிய பார்லிமெண்டில் சொல்ல அது அதிருப்தியின் அளவை அதிகரித்தி விட்டது. 

அந்த செய்தி இதுதான். எல்லைப் பகுதியில் ரமால்லா நகரில் பாலஸ்தீனியர்கள் புழங்க 17 லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைப்பதாகவும் இஸ்ரேலியர்கள் புழங்க 70 லிட்டர் தண்ணீர் கிடைப்பதாகவும் கிடைத்த செய்தியைச் சொல்லி இவர் வருந்தியிருக்கின்றார். இது தவறான தகவல் என பிரச்சனை எழ, விஷயத்தைச் சோதித்ததில் ஏற்றத்தாழ்வு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர் குறிப்பிட்டது போல 17 லிட்டர் அல்ல என அறிய வர நிலமை சற்றே அதிருப்தியின் அளவை உயர்த்தி விட்டது.

பழைய நாஸி அடக்குமுறை அனுபவங்களுக்குப் பிறகு இஸ்ரேல்-ஜெர்மனி இரண்டு நாடுகளுக்குமான உறவு படிப்படியாக 70களுக்குப் பிறகு தான் ஓரளவு நட்பு நிலையைக் காணத் தொடங்கியது. இக்கால ஜெர்மானிய தலைமுறையினர் இந்த இனப் பிரிவினைகளை காண்பதை விடுத்து தமது மூதாதையர் கடைபிடித்த  கடுமையான நடைமுறைகளை விமர்சனம் செய்யும்  இயல்பைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் அதே நிலை யூதர்களுக்கு இருக்கின்றதா என வரும் போது இது ஆம்/இல்லை என சொல்ல முடியாத ஒரு நிலையிலேயே சென்ஸிட்டிவான ஒரு விஷயமாகவே இருக்கின்றது. 

ஜெர்மனிக்கான இஸ்ரேலிய தூதர் இந்த நிலையை விமர்சிக்கும் வகையில் சொலும் போது இப்படி குறிப்பிடுகின்றார். 

"Originally I was totally anti-Germany and didn't believe Israel should have any ties with it. But by '68 we were really impressed by the generation of Germans who demanded their parents and teachers tell the truth about their Nazi past and the reparations agreement changed relations even further. We ultimately grasped that Germany was striving for a European Germany and not a German Europe. Now we almost see Germans demanding the same standards of Israelis," Primor said.

இதற்கு தொடர்ச்சியாக அமைவது போல ஜெர்மனியின் ப்ரெஸிடெண்ட் திரு.கவுக் அவர்கள் ஜெர்மனி முன்பு போல் உலக அரசியலில் பங்கெடுக்காமல் இருப்பதை விடுத்து இனி முன்னின்று உலக அரசியலில் தனது பங்கை செய்யத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி பேட்டியளித்திருக்கின்றார்.

Inline image 1

In an interview with Deutsche Welle, German President Joachim Gauck argues that Germany can no longer shy away from its international responsibilities - even if that means resorting to military force.
..Referring to Germany's "dark past," Gauck told DW that "Germany is a completely different country than it was in between the two World Wars." He said that the country is now often regarded as a model of democracy.

சுபா

​உசாத்துணை: 
 -http://www.dw.de/gauck-germany-must-not-back-away/a-17451461

Friday, January 24, 2014

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - ஜெர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர்

ஜெர்மனியில் தேர்தல் முடிந்து புதிய கூட்டணியும் ஆட்சிக்கு வந்தாகி விட்டது. பெரும் போட்டியிட்ட ஆளும் கட்சியும் எஸ்.பி.டி கட்சியும் இணைந்து கூட்டணி கட்சியை அமைக்க வேண்டிய சூழல்.

இந்த புதிய அரசில் பாதுகாப்பு அமைச்சராக ஜெர்மனியில் முதன் முறையாக ஒரு பெண் அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். இவர் சான்ஸலர் அங்கேலா மெர்க்கலின் மிக நம்பிக்கைக்கு உரியவரான திருமதி ஊர்சுலா ஃபோன் டெர் லைன்.


திருமதி ஃபோன் டெர் லைன் (மஞ்சள் உடையில்) - அருகில் திருமதி மெர்க்கல்

55 வயதான இவர் ஏற்கனவே குடும்ப-சமூக நல அமைச்சராக 4 ஆண்டுகளும் பின்னர் தொழில் துறை அமைச்சராக நான்கு ஆண்டுகளும், அதன் பின்னர் இப்போது இந்த புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளார்.

ஜெர்மனியின் அமைச்சர்கள் பட்டியலில் மிக உயர்ந்த மதிப்பைக் கொண்டவர் இவர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.  ஆப்கானிஸ்தான், சிரியா, லெபனான், லிபியா ஆகிய நாடுகளின் அரசியல் நிலைத்தன்மையில் ஜெர்மனியின் பாதுகாப்பு உதவிகள் தொடர்பான  பிரச்சனைகள் முந்தைய அமைச்சர்களுக்கு பிரச்சனையை தந்த  விஷயங்கள். அவற்றை சமாளிக்க இவர்தான் சரியானவர் என்ற எண்ணம் சான்ஸலருக்கு இருப்பது தெரிகிறது.

உலக நாடுகளில்  பல பெண் அமைச்சர்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்திருக்கின்றனர். நல்லதொரு பட்டியல் அவர்களின் புகைப்படங்களோடு இங்கே உள்ளது. http://www.guide2womenleaders.com/Defence_ministers.htm

சுபா

Thursday, January 23, 2014

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - ஜெர்மனியில் வேலைக்கு வருவோர்..

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெரும் நாடுகள் ஏனைய உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல சட்டப்படி தடையில்லை. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டில் ரோமானியாவிலிருந்தும் பல்கெரியாவிலிருந்தும் ஜெர்மனிக்கு வந்து சேர்ந்த வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை அரசாங்கத்தை சற்றே திகைக்க வைத்து விட்டது.

இந்த ஆண்டு தொடக்கமே இந்த அண்டை நாடுகளிலிருந்து வேலை தேடிவருவோரை சமாளிப்பது பற்றிய விஷயத்துடனேயே தொடங்கியது. இவ்விஷயம் தொடர்பாக சற்றே கடுமையான விவாதங்களும் விமர்சனங்களும் வந்தன. இந்த விவாதங்கள் எழுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒரு விஷயம் தான். அதாவது ரோமானியாவிலிருந்து வேலை தேடி வரும் ஒரு நபர், ஜெர்மனியில் நுழைந்தவுடன் தான் வேலை தேடுவதாக தெரிவித்து தனக்கு வருமானம் இல்லா நிலையை முதலில் பதிந்து விடுவார். அப்படி வருபவர்களில் பெண்கள் அதிகம். அதோடு தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்களும் கணிசமான எண்ணிக்கையினர். இப்படி வருவோர்களில் சிலர் இந்த வாய்ப்பை தவறாகப் பயண்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. உதாரணமாக ஜெர்மனிக்கு வந்து தான் வேலை தேடுவதைப் பதிந்த உடனேயே அரசாங்கம் அப்பெண்ணுக்கும் அவர் குழந்தைக்கும் மாதா மாதம் ஒரு தொகையை வழங்கும். ஒரு வருட காலம் அவர் வேலை தேடுவதிலேயே காலதை கழித்து விட்டு பின்னர் ரோமானியா திரும்பி விடுவார் 1 வருட காலம் குழந்தைக்காகக் கிடைத்த பணத்துடன். மீண்டும் வருவார் .. அதே பதிவு.. அதே நிலை... !

இப்போது ஜெர்மனி இதனை தடைசெய்ய சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. வேலை தேடி வருவோர் முதல் மூன்று மாதத்திற்குள் வேலை தேடிக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர் அவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும் என பேச்சுக்கள் செய்திகள் வந்துள்ளன. இன்னும் விவாதங்கள் தொடர்கின்றன.

சுபா

Tuesday, November 19, 2013

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - Monuments Men



ஜியோர்ஜ் க்ளூனியின் புதிய படங்களில் ஒன்று மோனுமெண்ட் மேன். 

ஜெர்மனியில் நாஸி ஆட்சியின் போதும் 2ம் உலகப்போரின் போதும்  அழிவுக்கு உள்ளாகும் நிலையிலிருந்த கலை வேலைப்படுகளைச் சேகரித்து, பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவின் உண்மை கதையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் படம் இது.  ஒருவருக்கும் மேற்பட்ட, குழுவாக இயங்கிய இக்குழுவில் இருந்தோரில், நாஸி கட்சி அரசியல்வாதிகளுடனேயே தொடர்பில் இருந்தவர்களும் உண்டு

முதலில் மோனுமெண்ட் மேன், இவர்களது பணி பற்றிய இந்த செய்தி ரோபர்ட் எட்சலின் Monuments Men Allied Heroes, Nazi Thieves and the Greatest Treasure Hunt in History என்ற நூலில் பதிவாகி இருக்கின்றது.  இப்போது க்ளூனி நடிக்க இக்கதை படமாக தயாராகிக்கொண்டிருக்கின்றது.  யுத்த சமயத்தில் எல்லோருக்குமே மனம் தங்கள் உயிரை பாதுகாக்க வேண்டுமே என்பதிலே இருப்பது தான் இயற்கை. ஆனால் இம்மனிதர்களோ அழிவின் இடையிலே கலைப்பொருட்களைப் பாதுகாக்க, சிற்பங்களைப் பாதுகாக்க முடிவெடுத்து இயங்கியது என்பது தான் இவர்களின் தனிச்சிறப்பு. விசித்திரமான, கலைப்படைப்புக்களின் மேல் தீரா காதல் கொண்ட இவர்கள் கலியின் காவல்ர்கள் என்றால் மிகையாகாது தானே!


மோனுமெண்ட் மேன் குழுவினரின் நடவடிக்கைகள் சாதாரண நிலையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றே. இவர்கள் 2ம் உலகப்போரின் போது சேகரித்து பாதுகாத்து வைத்த கலைப்பொருட்கள் இன்று நாட்டின் பொக்கிஷங்களில் வரிசையில் இடம்பிடிக்கின்றன. 

இவ்வகை வரலாற்றுச் செய்திகள் திரைப்படமாக மக்கள் மத்தியில் உலவ வருவது வரவேற்கத் தக்க ஒன்று. ஜெர்மனியிலேயே இப்படம் முழுமையாக படமாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இப்படம் விரைவில் வருகின்ற பெப்ரவரி மாதத்தில் பெர்லின் திரைப்பட விழாவின் போது வெளியீடு காண உள்ளதாகத் தெரிகின்றது.

முழுமையான செய்திக்கு http://www.dw.de/monuments-men-tracking-looted-treasures/a-17218246


Friday, August 9, 2013

பயணங்கள் தரும் அனுபவங்கள் - இன்று

பயணத்தில் புதிய மனிதர்களை நாம் சந்திப்பது வழக்கம் தானே.

வழக்கமான எனது வியாழக்கிழமை பயணத்தின் போது அருகில் அமர்ந்திருப்பவர் யாருடனும் நான் பேசுவதும் இல்லை; மற்றவர்களும் பேசுவதில்லை. முக்கிய காரணமே வியாழக்கிழமை மாலை அல்லது இரவு  விமானங்கள் பணி முடித்து தலை நிறைய பல சிந்தனைகளையும் கேள்விகளையும் சுமந்து கொண்டு தன்னுடனேயே வாதிட்டும், ஆமோதித்தும்,  ஒத்தும் போயும் இல்லையென்று மாற்றியும் அலுவலக விஷயங்களை அலசிக் கொண்டு வரும் நேரம் அது. அதில் கேசுவல் டாக்கிற்கு இடம் மிக மிகக் குறைவே.

என்றாவது எப்போதாவது தேவைப்பட்டால் மட்டும் அருகிலிருப்பவருடன்  பேசுவது நிகழும். அதுபோல் நேற்றும். மட்ரிட்லிருந்து ப்ராங்பர்ட் வந்து பின்னர் ப்ராங்பர்ட்டிலிருந்து ஸ்டுட்கார்ட் வரும் விமானத்தில் நேற்று என் அருகில் ஒரு இளம் ஜெர்மானியப் பெண் அமர்ந்திருந்தார். ஏதேச்சையாக அவர் ஒன்று கேட்க நான் ஒன்று சொல்ல என எங்கள் பேச்சு 45 நிமிடங்கள் பயணம் முழுக்க நீடித்தது.

24 வயது பெண். OM - Operation Mobilization எனும் ப்ரோட்டஸ்டன் சமய நிறுவனத்தில் 1 வருடம் அமெரிக்காவில் ஒஹையோவில் பணி புரிந்து விட்டு சிறு விடுமுறைக்காக வீடு திரும்புவதாகக் குறிப்பிட்டார். டயக்கோனி, காரிட்டாஸ் ஆகிய இரண்டு பெரிய  இவ்வகை கிறிஸ்துவ தொண்டூழிய நிறுவனங்களைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். எனது இரண்டு ஜெர்மானியத் தோழிகள் காரிட்டாஸிலும் டயக்கோனியிலும் பணி புரிகின்றார்கள். இருவருமே ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கோங்கோ நாட்டில் வருடத்தின் பல நாட்களைக் கழிப்பவர்கள். ஆனால்  இதுவரை Operation Mobilization எனும் இந்த நிறுவனம் பற்றி  நான் கேள்விப்பட்டதில்லையாகையால் இந்தப் பெண்ணிடம் மேலும் கேட்டு விபரமறிந்து கொண்டேன்.

அமெரிக்காவில் ஒஹையோ மானிலத்தின்  2100 பேர் மட்டுமே வசிக்கும் ஒரு சிறிய கிராமத்தில் இவருக்குப் பணி. குழந்தைகளுக்குப் பைபிளை வாசித்துக் காட்டுவதும் விளக்குதும் இப்பணியில் அடங்கும். சம்பளம் மிகக் குறைவு. ஆனால் பயணச் செலவு, உணவு தங்கும் இடம், மற்றும் ஏனைய செலவுகளுக்கான சிறு செலவுத் தொகையை இந்தத் தொண்டூழிய நிறுவனம் வழங்கிவிடுமாம். இந்தப் பெண்ணுக்கு இது கல்லூரி முடித்து இவ்வகைப் பணிகளில் அனுபவம் பெறுவதற்காகச் செல்லும் இரண்டாவது அனுபவமாம். முதலில் ஸ்பெயினின் ஒரு சிறு நகரில் 4 மாதங்கள் இத்தகைய பணி செய்து 1 மாத விடுமுறைக்குப் பின்னர் அமெரிக்கா சென்று அங்கு 1 வருடம் கிராமத்தில் பணி புரிந்து விட்டுத் திரும்புகின்றார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்தப் பெண் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்தவர். இந்த நிறுவனமோ ப்ராட்டெஸ்டண்ட் மதம் சார்ந்த நிறுவனம். இரண்டுக்குமே அடிப்படை கிறிஸ்துவம் தான் என்றாலும்  கொள்கை அளவில் அடிப்படையில் வேறுபடும் 2 மதங்கள்.  எல்லாமே வேலைதானே. இவ்வகை விஷயங்களில் அனுபவம் வேண்டும் என்பதால் இது எனக்குப் பிரச்சனையில்லை என்று சொல்லிச் சிரித்தாள் அந்தப் பெண்.

எனது உறவுக்காரப் பெண்.  மலேசியாவிலிருந்து தனது 20ம் வயதில் இங்கு வந்து ஜெர்மனி ஆகன் நகரில் 2ம் ஆண்டு கணினி இயந்திரத்துறையில் படிப்பவள். அவளும் இப்படித்தான். இளம் வயதாகினும் மிகுந்த துணிச்சலுடன் பயணிப்பதும் தனது வாழ்க்கைத் தேவைகளை தானே பார்த்துக் கொள்வதும் என இருக்கின்றாள்.

இத்தகைய இளம் பெண்களைப் பார்க்கும் போது என் மனதிற்கு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது. மிக இளம் வயதிலேயே தனியாக பல நாடுகளுக்குச் செல்லத் தயங்காத, தனக்குப் பிடித்த துறையில் தானே முடிவெடுத்து தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பக்குவம் இத்தகைய பெண்களுக்கு இருக்கின்றது.

பெண்களுக்குப் பல்வேறு வகையில் வாய்ப்புக்கள் குவிந்திருக்கும் காலம் இது என்பதில் ஐயமில்லை. சிந்திக்க, தனக்குச் சரியெனப்படும் தொழில் துறையைத்தேர்ந்தெடுக்க, முடிவெடுக்க, எடுத்த  முடிவைச் செயல்படுத்த வாய்ப்புக்கள் நிறைந்திருக்கின்றன. அச்சமும், தயக்கமும் இல்லாமல்,  இருக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டு செயல்படும் பெண்கள் வாழ்க்கையில் சந்தேகமின்றி மிக நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடிய காலம் இது.

தடைகள் புறத்தில் என்பதை விட மனத்தில் இருந்தால் தான் முன்னேற்றம் பாதிக்கும். மனத்தின் தடைகளை வீசிவிட்டு பெண்கள் தெளிவுடன் கல்வி, தொழில் துறை ஆகியவற்றில் சிறப்பு பெற வாய்ப்பளிக்கும் காலம் இது .  கிடைக்கின்ற நல்ல வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தெளிந்த சிந்தனையும், தூர நோக்குச் சிந்தனையும், சாதுர்யமும் சாமர்த்தியமும் ஒவ்வொரு பெண்களின் கைகளிலும் தான் இருக்கின்றது!!!!!

சுபா

Friday, August 2, 2013

ஸ்டுட்கார்ட்டில் இந்திய திரைப்பட விழா

ஸ்டுட்கார்ட் நகரில் எனது இல்லத்திற்கு அருகாமையிலேயே நடந்தும் கூட இவ்வாண்டு இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. குடும்பத்தார் சிறப்பு நிகழ்வுகளால் வார இறுதி நாட்களில் ஸ்டுட்கார்ட்டில் இல்லாத நிலையில்  இவ்வருடம் கலந்து கொள்ள முடியாமல் ஆகி விட்டது. வருடா வருடம் நிகழும் இந்த நிழ்வில் சென்ற வருடம் பல இந்தியத் திரைப்படக் கலைஞர்களுடன் தமிழ் சினிமா புகழ் சுகாசினி வந்திருந்தார். இந்த வருடம் ரேவதி வந்திருந்ததாகக் கேள்விப்பட்டேன்.

3 நாட்கள் நடைபெறும் இந்த வருடாந்திர நிகழ்வில் ஸ்டுட்கார்ட்டில் உள்ள திரையரங்குகளில் ஆங்காங்கே இந்திய திரைப்படங்களும் குறும்படங்களும் செய்திப்படங்களும் நடைபெறுவதோடு நடனங்களும் கடைகளும் அமைந்திருக்கும். இந்திய உணவுகளும் கிடைக்கும்.

இவ்வருட படங்களின் பட்டியலில் இடம்பெறும் ஒரு தமிழ் குறும்படமாக அமைவது திரு.ஜெயகாந்தனின் தாம்பத்யம் எனும் அதே தலைப்பிலான கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 10 நிமிட குறும்படம்.



காட்சியிடப்பட்ட முழு திரைப்படங்களின்  பட்டியலையும் இங்கே காணலாம்.
http://www.indisches-filmfestival.de/en/2013/programme/all-films/

ஏனைய தகவல்கள் அறிந்து கொள்ள http://www.indisches-filmfestival.de/en/2013/

சுபா