Wednesday, May 1, 2013

சாம்பியன்ஸ் லீக் 2013 (1)

சாம்பியன்ஸ் லீக்  ஐரோப்பாவின் மிகப் பிரசித்தி பெற்ற காற்பந்து போட்டி. ஒவ்வொருஆண்டும் நடைபெறும் இது  தற்சமயம் ஐரோப்பாவின் விளையாட்டுப் பிரியர்கள் தினம் தினம் பேசிக் கொள்ளும் விஷயங்களில் ஒன்று.

சென்ற ஆண்டு ஜெர்மனியின் எப்ஃசி பாயார்ன்  காற்பந்து கிளப்பும் இங்கிலாந்தின் செல்ஸி கிளப்பும் இறுதிப் போட்டியில் மோதி செல்ஸி வெற்றி வாகை சூடிச் சென்றது. பாயார்ன் குழு சோக முகத்துடன் திரும்பியது.

இந்த ஆண்டு போட்டிகள் சென்ற நாட்களில் முடிந்து இன்று மேலும் ஒரு அறை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 

ஜெர்மனியின் மிகப் புகழ்பெற்ற எப்ஃசி பாயார்ன்  க்ளப்பும் பொரூசியா டோர்ட்முன்ட் கிளப்பும் ஸ்பெயினின் மிகப் புகழ்பெற்ற பார்ஸலோனா கிளப்புடனும் ரியால் மட்ரிட் கிளப்புடனும் மோதியதில் ஜெர்ம்னியின் பொரூசியா டோர்ட்முன்ட் க்ளப் இறுதிப் போட்டிக்குத் தயார்படுத்திக் கொண்டு விட்டது. ரியால் மட்ரிட் புள்ளிகள் போதாதனால் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இன்று எப்ஃசி பாயார்ன் க்ளப்பும் பார்ஸலோனா  குழுவும் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று செல்பவர் வரும் மே மாதம் 25ம் நாள்  சனிக்கிழமை இங்கிலாந்தின் வெம்ப்ளி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் போட்டி இடுவர்.

இந்தப் போட்டிகளில் குழுக்களாக பலர் சேர்ந்து தங்கள் குழுவின் வெற்றிக்குப் போராடினாலும் ஒரு சிலர் தனித்துவத்தோடு போராடி பெயர் பெறுவதும் மிகப் பெரிய புகழை அடைத்து விசிறிகள் சூழ்ந்து வருவதும் இங்கே மிகப் பிரபலம்.

அந்த வகையில் தங்க காலணியை பரிசாக வாங்கிய ரியால் மட்ரிட்டின் விளையாட்டளர் ரோனால்டோ விளையாடும் போதெல்லாம் கேமரா அவர் பக்கமே செல்வதும் விசிறிகள் ரொனால்டோ பெயரைக் கூறிக் கத்தி மகிழ்வதும் நேரில் பார்க்கும் போது மிக சுவாரசியமாக இருக்கும். 

Inline image 1

சென்ற வாரம் ஏப்ரல் 24 பொருசியா டோர்ட்முண்டிற்கும் ரியால் மட்ரிட்டிற்கும் நடந்த  போட்டியின் போது நான் மட்ரிட்டில் இருந்ததால் தொலைக்காட்சியில் மாலை நண்பர்களுடன் இருந்து ஒரு உணவகத்தில் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. ஸ்பேனிஷ் மக்கள் சூழ்ந்திருக்கும் போது நானும் எனது இன்னொரு அலுவலக நண்பர் இருவர் மட்டுமே ஜெர்மானிய பொருசியா டோர்ட்முண்ட் குழுவிற்காக கைதட்டிக் கொண்டிருந்தோம். உள்ளூர் மக்களோடு சேர்ந்து இப்படி விளையாட்டினை ரசிப்பதே ஒரு தனி அனுபவம் தான்.

பொருசியா டோர்ட்முண்ட் கடந்த 4 ஆண்டுகளில் மிகத் துரிதமாக முன்னேறி ஜெர்மனியின் புண்டஸ்லீகா விளையாட்டுக் கோப்பையை கடந்த 2 ஆண்டுகள் வரிசையாக தக்க வைத்துக் கொண்ட ஒரு க்ளப். இதில் மிக இளமையான விளையாட்டளர்களான மரியோ கோட்ஸ, மார்க்கோ ரோய்ஸ். மார்க் ஹும்மல் போன்றவர்கள் இருந்தாலும் இந்த க்ளப்பின் பெயரைச் சொன்னாலே நினைவில் வருபவர் இக்குழுவின் பயிற்சியாளர்தான்.

Inline image 2

பயிற்சியாளர் யூர்கன் க்ளோப். இன்றைய நிலையில் அடிக்கடி உள்ளூரில் பேசப்படும் விளையாட்டாளர் பெயர் பட்டியலில் இவர் பெயர் நிச்சயம் இருக்கும்.


எப்ஃசி பாயார்ன் - என்னுடைய பேவரட் குழு.  இதில் ஜெர்மனியின் முக்கிய விளையாட்டாளர்களான ஷ்வையிண்டைகர், மூல்லர், மரியோ கோமேஸ், லாம் என சிறந்த விளையாட்டளர்களின் பட்டாளம் அமைந்த அணி.

Inline image 3

இன்று சற்று நேரத்தில் இக்குழுவுடன் பார்ஸலோனா குழு செமி பைனலில் மோத உள்ளது. இதில் வெற்றி எப்ஃசி பாயார்ன் குழுவுக்குத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு.

அப்படி நடந்தால் இரண்டு ஜெர்மன் குழுக்கள் இவ்வாண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளும். வெம்ப்ளியில் இந்த விளையாட்டை நேரில் பார்க்க ஒரு டிக்கெட்டும் பாக்கி இருக்காது என்பது நிச்சயம்.

சுபா

Saturday, April 20, 2013

ஜெர்மானிய சமையல்... எப்படியிருக்கும்..? - 4 (Kartoffelsalat)


இந்த இழையை நான் மறந்து போயிருந்தேன். இன்று ஒரு ஜெர்மானிய உணவு செய்ய நினைத்ததால் மீண்டும் இந்தப் பதிவு ஞாபகம் வரவே இங்கே ஒரு ஜெர்மானியஉணவு செய்முறையைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். அதற்கு முன் இந்தச் சமையலின் சிறப்புக்களையும் கொஞ்சம் சொல்லி வைப்பது தகுமல்லவா..

ஆசிய உணவு வகைகளில் எப்படி அரிசி மிக முக்கியப் பங்கு வகிக்கின்றதோ அதே போல ஐரோப்பிய உணவு வகைகளில் அதிலும் குறிப்பாக ஜெர்மனியில் கோதுமையும் உருளைக்கிழங்கும் மிக முக்கிய உணவுகளாக அமைந்திருக்கின்றன.

16ம் நூற்றாண்டில் ஸ்பேஷினிஷ்காரார்கள் தெற்கு அமெரிக்காவை அதிலும் பெரு நாட்டிற்குச் சென்று அங்கே தமது ஆளுமையை ஆரம்பித்த போது கண்டெடுத்த   விஷயங்களில் உருளைக்கிழங்கு முக்கிய ஒன்றாக அமைகின்றது. உருளைக் கிழங்கின் சுவையில் மயங்கிப் போன ஸ்பேனிஷ் மக்கள் பெருவை விட்டு க்கிளம்பு போது கொண்டு வந்த  உருளைக் கிழங்கை ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் நட்டு வைத்து வளர்க்க ஆரம்பித்தனர். முதலில் ஸ்பெயினில் பரவலாக உணவில் இடம்பெற்ற உருளைக் கிழங்கு மிக விரைவில் ஐரோப்பா முழுமைக்கும் முக்கிய உணவாக மாறி உணவில் ஆளுமையைப் பிடித்துக் கொண்டது.

அதற்கு முன்னால் ஜெர்மனியைப் பொறுத்த வரை இறைச்சி உணவை அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருந்த இம்மக்கள் தங்கள் உணவில் உருளைக்கிழங்கையும் படிப்படியாக இணைத்துக் கொண்டு வெவ்வேறு வகையில் இதனை சமைக்க ஆரம்பித்தனர்.

உருளைக் கிழங்கை அவித்தும், பொறித்தும், மாவாக ஆக்கியும், சூப்பாக செய்தும், பல்வேறு வடிவங்கள் கொடுத்து தங்கள் உணவுகளில் ஜெர்மானியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த  வகையில் இங்கே மிக முக்கியமாக வருடத்தின் எல்லா காலங்களிலும் ஜெர்மானிய உணவில் இடம் பெறும் ஒன்று கார்ட்டோபல் சாலாட். (Kartoffelsalat)

இதனை வெவ்வேறு வகைகளில் தயாரிக்கலாம். ஜெர்மனியின் மானிலங்களைப்  பொறுத்த வாரியாக என்ற வகையில் இந்தச் சமையல் முறை மாறுகின்றது. நான் இருக்கும் ஷ்வாபன்லாண்டில் தயாரிக்கும் முறை என் மாமனார் இருக்கும் ரைன்லான் பால்ஸ் இடத்திலிருந்து வேறு பட்டது. பாயார்னின் வேறு விதமாகவும் எசனில் வேறு மாதிரியாகவும் என இது வடிவம் எடுக்கின்றது.

உதாரணத்திற்கு இங்குள்ள படத்தைப் பாருங்கள். எத்தனை வடிவங்களில் இவை வேறு படுகின்றன என்று இப்படங்கள் காட்டும்.

சரி நான் இன்று தயாரித்த கர்ட்டோபல் சாலாட் செய்முறையைப் பகிர்ந்து கொள்கின்றேன். இதற்குப் பெயர் மெடிட்டரானன் கார்ட்டோபல் சாலாட்.



செய்முறை


  • உருளைக்கிழங்கு - 8
  • கருப்பு ஆலீவ் - 10 (சிறிதாக நறுக்கியவை)
  • மஸ்டட்ர்ட் க்ரீம் - 2 கரண்டி
  • பெரிய காப்ஸிகன் சிவப்பு மிளகாய் - பாதி (பொடியாக நறுக்கியது)
  • ஆலிவ் எண்ணெய் - 2 கரண்டி
  • வெள்ளரிக்காய் - சிறியது (சிறிதாக நறுக்கியது)
  • உலர்ந்த  தக்காளி - சிறிதாக நறுக்கியது
  • வெங்காயத் தாள்
  • உப்பு - தேவையான அளவு
  • வினிகர் - 3 கரண்டி


உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோல் நீக்கி அதனை அவித்து எடுத்துக் க் கொள்ளவும். நீரில்லாத வகையில் ஸ்டீம் செய்து அவிப்பது நன்று.



கருப்பு ஆலீவ் கொட்டைகளை நறுக்கிக் கொள்ளவும். மிளாகாய், தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், உலர்ந்த தக்காளி இவை அனைத்தையும் விரும்பும் வடிவில் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.



வேகவைத்த உருளைக் கிழங்கை சூடாக இருக்கும் போதே ஒரு பெரிய பாத்திரத்தில் சிறிதி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.



ஒரு சிறிய பாத்திரத்தில் மஸ்டர் க்ரீம், உப்பு, வினிகர் ஆலீவ் எண்ணெய் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை இப்போது வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து உருளைக் கிழங்கு உடைந்து விடா வகையில்  கிளறவும்.

பின்னர் வெட்டி வைத்துள்ள காய்கறிகளை இந்தக் கலவையில் சேர்க்கவும். இப்போது இந்தக் கலவையை மூடி 30 நிமிடங்கள் வைத்து உப்பு சரி பார்க்கவும். உப்பு குறைந்திருந்தால் அதனைச் சேர்க்கவும்.



இதனை தனியாக சாப்பிடுவது என்பது பொதுவாக இல்லை. ரொட்டியுடனோ, வருத்த காய்கறிகளுடனோ, இறைச்சி, மீன் வகைகளுடனோ சேர்த்து சாப்பிடுவதே வழக்கம்.

கோடை காலங்களில் க்ரில் பார்ட்டிகள் அனைத்திலும் தவறாமல் இடம் பெறும் ஒரு உணவு இது. செய்து பாருங்களேன்.


சுபா


Thursday, April 11, 2013

பயணங்கள் தரும் அனுபவங்கள் - இன்று


விமானத்தில் பயணிக்கும் போது எப்போதுமே நான் மிஞ்சியிருக்கும் அலுவலக வேலைகளைக் கணினியில் தொடர்வதே வேலையாகிப் போகும் போது அருகில் நடக்கும் விஷயங்களை அவ்வளவாக கவனிப்பதில்லை; என்னை அவர்கள் ஏதாவது ஒரு வகையில் கவன ஈர்ப்பு செய்தால் தவிர. இன்று தற்செயலாக எனக்கு மறுபக்கத்தில் அமர்ந்திருந்த  ஒரு பயணியிடம் என் பார்வை சென்றது. அழகிய நீல நிறத்தில் கையில் ஒரு நூல்..புத்தகத்தின் பெயர் re-think - how to think differently.

எனது பயண அனுபவத்தில் பொதுவாகவே வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை  மதியம்/மாலை மட்ரிட்டிலிருந்து மூனிக் அல்லது சூரிச் வரும் பயணிகள் ஏறக்குறைய 80-90 விழுக்காட்டினர் அலுவலக் காரியமாகப் பயணிப்பவர்களாகத்தான் இருக்கும். ஆக கையில் அலுவலகக் கணினிகளோடு வேலையைத் தொடர்பவர்கள்.. என்னைப் போல.. பலர். இந்த மனிதரும்  அலுவலகப் பயணம் செய்வது போலத்தான் உடையில் காட்சியளித்தார். re-think -  how to think differently என்று நினைத்து தனது சிந்தனையில் மாற்றம் செய்ய நினைத்திருப்பார் போலிருக்கின்றது :-)

கொஞ்ச நேரம் வாசித்துக் கொண்டிருந்தவர் பின்னர் தூங்க ஆரம்பித்து விட்டார். பயணம் முழுதும் ஏறக்குறைய தூக்கம் தான். நூலில் சில பக்கங்கள் கூட வாசித்திருக்க மாட்டார் என நினைக்கின்றேன். பாவம் மாற்றி வித்தியாசமாக சிந்திப்பது அவ்வளவு அலுப்பைக் கொடுத்திருக்கும் போல.:-)

விமானப் பயணங்களில் பெரும்பாலும் iPad, kindle,  வைத்து நூல்கள் வாசிப்போரே அதிகம். இது பயணத்தை ஒரு வகையில் எளிதாக்குகின்றது.

இன்னொருவரையும் தற்செயலாகப் பார்த்தபோது சூடோக்கு புதிரை செய்து கொண்டிருந்தார்.

பயணம் எடுக்கும் நேரத்தை ஏதோ ஒரு வகையில் செலவழிக்க ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியத்தை செய்து கொண்டிருக்கின்றோம்; அவரவருக்கு ஏற்ற, விரும்பும் வகையில். நமக்கு நமது தேர்வு சரியாக அமைந்து நமது செயல்பாடுகள் நமது தேவையைப் பூர்த்தி செய்கின்றதா என்பது தானே முக்கியமாகின்றது!.

சுபா

Thursday, March 28, 2013

சைக்கிள் நகரம்


பெரிய நகரங்களில் சைக்கிள் பயன்பாடு சாத்தியப்படுமா என்பவர்களுக்கு ஏன் முடியாது என வியக்க வைக்கும் நகரம் ஆம்ஸ்டெர்டாம். நெதர்லாந்தின் தலைநகரம் எனபதோடு இந்த நாட்டின் மிகப் பெரிய ஒரு நகரமாகவும் இது இருக்கின்றது.

மூன்று நாட்களுக்கு முன்னர் திங்கட்கிழமை அலுவல் நிமித்தம் ஆம்ஸ்டெர்டாம் சென்றிருந்தேன். என் காரிலேயே பயணம். எனது இல்லத்திலிருந்து 630 கிமீ வட மேற்கு நோக்கிச் செல்ல வேண்டும். பணி கொட்டிக் கொண்டிருந்ததால் 7 மணி நேர பயணமாகியது. ஆம்ஸ்டர்டாமில் வெயில் 9 டிகிரி வரை சீதோஷ்ணமும் பயங்கரக் காற்றும் ஒரு வகை வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. இரண்டு நாட்களும் அலுவலகத்தில் மீட்டிங்கில் மூழ்கிப் போனாலும் மாலையில் ஆம்ஸ்டெர்டாம் நகரைச் சற்று சுற்றி வரவும் இரவு உணவுக்குச் செல்லவும் வாய்ப்பமைந்ததில் ஆம்ஸ்டெர்டாம் நகர் மத்தியில் சில மணி நேரங்களை செலவிட முடிந்தது.



இது எனக்கு ஆடர்டாமிற்கான இரண்டாவது பயணம். எனது முதல் பயணத்திலும் நகரம் முழுக்க சைக்கிள் பயணிகள் அங்கும் இங்குமாக வாகனங்களுக்கும் பஸ்களுக்கும் மத்தியில் பயணிப்பதைப் பார்த்து  ரசித்திருக்கின்றேன். இம்முறை நானே வானமும் ஓட்ட வேண்டிய நிலை என்பதால் மிக மிக கவனமாகவே வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டியதாயிற்று.



எங்கிருந்து வருவார்கள் என எதிர்பார்க்கவே முடியாத வகையில் முன்னும் பின்னும் அங்கும் இங்குமெனெ எங்கும் சைக்கிள் பயணிகள். ஈசல்கள், ஈக்கள் போல பறந்து வரும் அவர்கள் வாகனத்தில் செல்வோருக்கு மட்டுமல்ல சாலையில் நடந்து செல்பவர்களுக்கும் சவால்தான்.

சீஸ் கடைக்கு முன்னர் சைக்கிள்

ஆனால் இவையெல்லாம் அவ்வப்போது வந்து செல்பவர்க்ளுக்குத்தான் பிரச்சனை என்பதும் உள்ளூர் மக்கள் சைக்கிள் பயணத்திற்கும் சைக்கிள் பயணிகளுக்கும் பழகியவர்கள் என்பதும் நன்கு தெரிகிறது.

நகரின் எந்த மூலையைப் பார்த்தாலும் சைக்கிள்கள் வைக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது. இங்கே அலுவலகத்திற்கு வருபவர்கள் சைக்கிளில் வருவதை ட்ஸ்டேட்டஸ் குறைவாகக் கருதும் நிலையில்லை. மாணவர்கள் இளைஞர்கள் என குறிப்பிட்டதொரு வரையறை என இல்லாமல் எல்லோருமே, எல்லா வயதுக்காரர்களும் சைக்கிள்களில் பயணிக்கின்றனர்.

மலைகள் இன்றி சம தரையாக இருக்கும் நிலை சைக்கிள் பயணிகளுக்கு பயணத்தை அலுப்பில்லாமல் சுலபமாக்குகின்றது. பெரிய நகரத்திற்குள் வாகனத்தை எடுத்துச் சென்று பார்க்கிங் செய்து அதற்குப் பணம் கட்டிப் போக வேண்டுமே என்ற நிலையும் இல்லை. ஆக எல்லா வகையிலும் சுலபமான ஒரு வாகணமாக சைக்கிள் இங்கே அமைந்திருக்கின்றது.

அடுத்த முறை ஆம்ஸ்டெர்டாம் செல்ல நேரும் போது இங்கே வாடகைக்கு சைக்கிள் எடுத்துக் கொண்டு ஓட்டிச் சென்று வர வேண்டும் என்று அங்கிருந்த வேளையில் நினைத்துக் கொண்டேன்.

மேலும் ஆம்ஸ்டெர்டாமின் சில படங்கள்...

windmill



சாலையில் பயணம்

இலை உதிர்த்து நிற்கும் மரங்கள்


நகருக்குள் ட்ராம், பஸ் பொதுப் போக்குவரத்து

Rijks Museum

புகைப்படம் எடுத்துக் கொள்ளும் இளைஞர்கள்

Rijks Museum சுவர் ஓவியம் ஒன்று  - 15ம் நூற்றாண்டு 


நகருக்குள் நதிகளுக்கிடையே பழமையான கட்டிடங்கள்



நிஜமான உடும்பு இல்லை..:-)




டூலிப் மலர்கள் மலரத் தொடங்கி விட்டன

சீஸ் கட்டிகள் - கௌடா வகை

வெவ்வேறு சுவைகளில் மஃப்பின் வகைகள்



அன்புடன்
சுபா




Monday, February 4, 2013

இப்படி ஒரு சோதனையா ..?


இன்று மீண்டும் மட்ரிட்டுக்குப் பயணம். பொதுவாக எனது திங்கட்கிழமை பயணம் என்பது ஸ்டுட்கார்ட்டிலிருந்து சூரிச் அல்லது மூன்ஷன் பின்னர் அங்கிருந்து மட்ரிட் என்பதாக அமையும். ஆனால் இன்றைய பயணம் ஸ்டிட்கார்ட்டிலிருந்து ஜெர்மனியின் வடக்கு மானிலமான ஹம்பெர்க் சென்று பின்னர் அங்கிருந்து மட்ரிட் வருவதாக அமைந்திருந்தது. எதிர்பாராத ஒரு சம்பவம் இன்று வித்தியாசமான மறக்க முடியாத ஒரு அனுபவமாக அமைந்து போனது.

ஸ்டுட்கார்ட்டில் பனி தூறிக் கொண்டிருந்தாலும் பயணம் பிரச்சனையில்லாமலேயே அமைந்தது. ஹாம்பெர்க்கிலிருந்து மட்ரிட் புறப்பட ஆயத்தமாகி  விமானத்தில் ஏறி இருக்கையிலும் வந்து அமர்ந்தாகி விட்டது. என் அருகில் ஒரு ஜெர்மனியில் வசிக்கும் ஷ்பானிஷ் பெண்மணியும் இருக்க இருவரும் கொஞ்சம் பேசிக் கொண்டோம்.

விமானம் புறப்பட்டு ஏறக்குறை 15 நிமிடத்தில் விமானத்தின் நிலை சரியாக இல்லாதமையைப் பயணிகள் உணர்ந்தோம்.இங்கேயும் அங்கேயும் கப்பல் கடல் அலையில் அசைவது போல என வேகமாக அசைய ஆரம்பித்து விட்டது விமானம். ஏறக்குறைய 25வது நிமிடத்தில் கேப்டன் அறிவிப்பு தருகின்றார். அதாவது விமானத்தின் கீழ்பகுதியில் பயணிகள் பைகள் வைக்கும் கார்கோ செக்‌ஷன் கதவு திறந்து கொண்டு விட்டதாகவும் அதனை இயக்கி மூட முடியாத நிலையில் இருப்பதால் விமானத்தில் காற்றின் அழுத்தம் ஏறி விட்டதாகவும் அதனால் உடனே ஹாம்பெர்க் விமான நிலையத்திற்கே திரும்பியாக வேண்டிய சூழல் இருப்பதாகவும் அறிவிப்பு வந்தது.

பயணிகளுக்கு ஆறுதல் சொல்ல வந்த வெண்மை நிறத்து விமானப் பணிப்பெண்னின் முகம் மேலும்  வெளுத்துப் போய் காட்சியளித்தது.. இது என்ன சோதனை என எனக்கு மனம் வருந்தத் தொடங்கி விட்டது, வருந்தி என்ன செய்வது? பிரச்சனையிருக்காது. கீழே சரியாக தரையிறக்கி விடுவார் விமானி என்ற நம்பிக்கை மனதில் இருந்ததால் என் கணினியில் தொடர்ந்து அலுவலக வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தேன். வேலையில் அழுந்திப் போனால் இந்தக் கவலை மறந்து விடும் என்ற நினைப்பில்.

ஆனால் என் அருகில் இருந்த பெண்மணிக்கு மிகுந்த கோபம். வருத்தம். ஏன் முதலிலேயே சோதித்திருக்கலாமே. இப்படி செய்கின்றார்களே என வருந்தி திட்டிக் கொண்டிருந்தவர் கொஞ்ச நேரத்தில் என் கைகளைப்ப் பிடித்துக் கொண்டு எனக்கு மிக பயமாக இருக்கின்றது. வயிறைப் பிசைகின்றது. என்று சோகமாக பேச ஆரம்பிக்க எனக்கும் அவரது பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது.

சரி ஹாம்பெர்க் செல்ல நிச்சயம் குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகும் என்பதால் பேசிக் கொண்டே வருவோமே என கணினியை மூடிவிட்டு பேச ஆரம்பித்தோம். அவர் பணி அவர் கணவன் என எங்கள் பேச்சு ஆரம்பித்தது. ஜெர்மானிய கணவர் அவருக்கு. ஜெர்மானிய ஆண்களைப் பற்றிய பொதுக் குணங்கள் பற்றி பேச்சு என திசை திரும்பியது எங்கள் உரையாடல். தனது கணவரின்  ”குண நலன்களை”  விரிவாக உதாரணங்களுடன் விவரித்து சுவாரசியமாக  சொல்லிக் கொண்டே வந்தார். சுவாரசியமாகப் பேசிக் கொண்டே வந்ததில் நேரம் போனது தெரியவில்லை. ஒரு வழியாக ஹாம்பெர்க் விமான நிலையத்தில் ஒரு no man's land பகுதியில் வந்து விமானத்தை மிக மிக மிக பத்திரமாக இறக்கினார் விமானி.


சோதனை தந்த விமானம்

அடுத்து ஒரு அறிவிப்பு விமான கேப்டனிடமிருந்து வந்தது.. டெக்னீஷியன்கள் வந்து பார்த்து செல்லும் வரை பொறுமையாக இருக்கும் உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி என்று.

என் பக்கத்து சீட் பெண்மனிக்கு கடும் போகம். “நாம் எங்கேயாவது சொன்னோமா.. புரிந்துணர்வோடு அமைதியாக இருப்போம் என்று. என்ன அவர்களே தீர்மானித்துக் கொள்கின்றார்களே? “ என்று சொல்ல எனக்கு சிரிப்பு தாங்க வில்லை. ஒரு வழியாக டெக்னீஷியன்கள் பார்த்து இதனை சரி செய்ய முடியாது என்று சொல்லி எங்களை விமான நிலைய பஸ்ஸில் ஏற்றி திரும்ப விமான நிலயத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர்.

1  மணி நேரத்திற்குப் பின்னர் செய்தி வந்தது. Lufthansa  நிறுவனத்தின் மற்றொரு விமானத்தை ஏற்பாடு செய்து முதல் விமானத்தில் ஏற்றிய பைகளையெல்லாம் இறக்கி இந்தப் புதிய விமானத்தில் ஏற்றி எங்களையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது இந்தப் புதிய விமானம்.

மீண்டும் அதில் பயனித்து ஒரு வழியாக மட்ரிட் வந்து சேர்ந்தேன். அந்தப் பெண்மணியும் அன்பொழுக விடைபெற்றுக் கொண்டு சென்றார்.

எப்படியெல்லாம் அனுபவம் நமக்குக் கிடைக்கின்றது என நினைத்துக் கொண்டே டெக்ஸியில் வந்து அமர்ந்தேன்.

சுபா

Saturday, January 19, 2013

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள்


ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் ஜெர்மனியில்  முந்தைய ஜெர்மன் அதிபர் கிறிஸ்டியான் உல்வின் பெயர் செய்தித் தாட்களிலும் தொலைக்காட்சிகளிலும் இடம்பெறுகின்றது. அவரும் அவரது துணைவியாரும் அதிகாரப்பூர்வமாகப் பிரியும் செய்தியை சில நாட்களுக்கு முன்னர் இருவரும் வெளியிட்டதிலிருந்து இப்போது இது பரவலாகப் பேசப்படும் செய்தியாக அமைந்திருக்கின்றது. ஜெர்மனியின் க்லேமரஸ் பார்ட்னர் என சில வருடங்கள் இவர்களை மீடியாக்கள் வர்ணித்தன. பெட்டினா உல்வ்  Jenseits des Protokolls  என்ற ஒரு நூலையும் எழுதி வெளியிட்டிருந்தார்.




இன்னொரு உள்ளூர் விஷயம்..

இவ்வருடம் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் கட்சியின் அங்கேலா மெர்க்கலை எதிர்த்துப் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கும் SPD கட்சியின் ஸ்டையின்ப்ரூக் பற்றியது.



அரசியல் ஆய்வாளர்கள் தங்கள் வேலையைத் தொடங்கி விட்டனர். இவரை பேச வைத்து இவரது குறை நிறைகளை அவர் பேச்சிலிருந்து பிடுங்கி எடுத்து அதனை ஆராய்வது இவர்களுக்கு நல்ல வேலையாக இப்போது அமைந்துள்ளது. மனதில் படுவதை வெளிப்படையாகச் சொல்லும் அடிப்படை குணம் உள்ளவர். ஆக இவர் ஒரு அரசியல் கட்சிக்கு தகுதியானவர் அல்ல என சிலர் அபிராயம் தெரிவித்திருக்கின்றனர். திறமைசாலி.. குறிப்பாக பொருளாத மேம்பாடு எனும் போது இவர் திறமை அளப்பறியது. ஆக இவர் தகுதியானர் என சிலர் அபிப்ராயம் சொல்கின்றனர். உள்ளூரில், வரும் நாட்களில் மிக அதிகமாப் பேசப்படும் ஒரு ஜெர்மானிய ஆண் என்றால் இவராகத் தான் இருக்கும்.

சுபா

Friday, January 18, 2013

பனியிலும் ஒரு அனுபவம்


பல விஷயங்கள் நாம் விரும்புகின்றோமோ விரும்பவில்லையோ நடந்தேவிடுகின்றன. ஆனால் எல்லாவற்றிலுமே புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றேன் என்றே எப்போதும் நான் நினைக்கின்றேன். அனுபவங்கள் தானே வாழ்க்கையில் விலை மதிக்க முடியாத விஷயங்களாக அமைகின்றன.

நேற்று மட்ரிட்டிலிருந்து ஸ்டுட்கார்ட் திரும்ப வேண்டும். எனது விமான பயணம் மட்ரிட்டிலிருந்து மூன்ஷன் பின்னர் மூன்ஷனிலிருந்து ஸ்டுட்கார்ட் என்பதாக அமைத்திருந்தேன். மதியம் 2:45க்கு தயாராகவேண்டிய முதல் விமானம் அடர்ந்த பனியினால் தாமதப்படுத்தப்பட்டு 5 மணிக்குத்தான் புறப்படும் என்று கூறிவிட்டனர். முதல் விமானம் சரியான நேரத்திற்குச் சென்றால் தான் நான் 2வது கனெக்டிங் ப்ளைட்டை எடுக்க முடியும். அது முடியாது என்றாகி விட்டது. Lufthansa  எனக்கு கனெக்டிங் ப்ளைட்டை மாற்றி கொண்டோர் நிறுவனத்தைத் தொடர்வு கொண்டு 9 மணிக்கு மூன்ஷனிலிருந்து ஸ்டுட்கார்ட் புறப்படும்  ஒரு விமானத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

5 மணிக்காவது புறப்படுமா என காத்திருந்தால் அதிலும் தாமதம். மூன்ஷனிலிருந்து சிக்னல் வராததால் விமானத்தை எடுக்க முடியவில்லை. 6:10க்கு ஒரு வழியாக விமானத்தை எடுத்தனர். 2 மணி 10 நிமிட பயணம்.  ஆனால் மூன்ஷன் வந்தடையும் போது விமானம் இறங்க Terminal 2ல் இடம் கிடைக்கவில்லை. ஆக விமானம் வானத்திலேயே 40 நிமிடம் மீண்டும் பறந்து இறுதியில் வந்து இறங்கும் போது 9:15.  அதிலும் இறங்குவதற்கும் இடமே கிடைக்காமல் எல்லா இடங்களிலும் பனி கொட்டி கிடந்ததால் இந்த விமானத்தை கார்கோ விமானம் வந்திறங்கும் இடத்தில் இறக்கினர்.



எனது கனெக்டிங் ப்ளைட் 9 மணிக்கானது அதற்குள் போய்விட்டது. நான் மட்டுமல்ல என்னைப்போல  ஏறக்குறைய 9000 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர் . நான் விமான நிலையம் வந்து பார்த்தால் கனெக்டிங் ப்ளைட் உதவி கேட்டு ஒரு நீண்ட வரிசை. Lufthansa ஊழியர்கள் 20 பேருக்குமேல் அவர்களைக்  கவனித்து தண்ணீர் வழங்கி புதிய விமானப் பயணத்தைத் தேடி உறுதி செய்து உதவிக் கொண்டிருந்தனர்.

எனக்கு இரண்டு வழிகள் தான் இருந்தன ஸ்டுட்கார்ட் திரும்ப.
1. மறுநாள் அதாவது இன்று காலை தயாராகும் ஏதாவது ஒரு விமானத்தில் ஸ்டுட்கார்ட் வரலாம் ஆனால் எத்தனை மணிக்கு அது அமையும் என்று தெரியாது.
2.ரயில் எடுத்து ஸ்டுட்கார்ட் வந்து விடலாம்.

வரிசையில் 10 நிமிடம் நின்று பார்த்தேன். மனம் கேட்கவில்லை. ஏதாவது செய்வோமே என வரிசையிலிருந்து விலகி முன்னே சென்று அங்கு நின்று கொண்டிருந்த ஒரு   Lufthansa ஊழியரை அணுகினேன்.

அவரைச் சுற்றி சில பேர் நின்று அவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு கேட்டுக் கொண்டு இருந்தனர். என் முறை வந்தபோது என் நிலையைச் சொன்னேன். அவர் இன்றே நான் ஸ்டுட்கார்ட் திரும்ப வேண்டுமா எனக் கேட்க ஆமாம் என்றேன். உடனே தன் மோபைல் போனில் ரயில் தொடர்பை பார்த்து சரி.. 10க்கு ஒரு ரயில் விமான நிலையத்திலிருந்து மத்திய ரயில் நிலையம் செல்கின்றது. அதில் ஏறினால் 10:50க்கு அங்கிருந்து செல்லும் ரயிலில் ஏறி இரவு/காலை 1:10க்கு ஸ்டுட்கார்ட் ரயில் நிலையம் வந்து விடலாம் என்றார். சரி என்று கடிகாரத்தைப் பார்த்தால் மணி 9 33.

உடனே எனது விமான டிக்கட்டை ரயில் டிக்கெட்டாக மாற்றும் முயற்சியை செய்ய வேண்டும். அதற்கு இன்னொரு இடம் போக வேண்டும். அவர் உடனே என்னை தன்னுடன் அழைத்துக் கொண்டு வேகமாக வரும்படி சொல்லி அழைத்துச் சென்றார். அங்கு சென்றால் அங்கேயும் பலர் வரிசையில். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்காக  அந்த கவுண்டரில் இருந்த Lufthansa ஊழியரை அனுகி எனக்கு உடனடி உதவி தேவை எனச் சொல்லி முயற்சித்தார். ஆனால் ..கம்பியூட்டரில் அப்போது பிரச்சனை ஏற்பட எனக்கு வவுச்சர் தர அந்த Lufthansa ஊழியரால் முடியவில்லை.

உடனே அவரே முடிவு செய்தார். வவுச்சர் வேண்டாம். நேராக ரயிலில் சென்று ஏறி விடுங்கள். பிரச்சனை இருந்தால் விவரத்தை சொல்லுங்கள். பணம் கட்டும்படி அமைந்தால் பணம் கட்டி புதிய டிக்கட் வாங்கி விட்டு அதனை நாளை ரீ இம்பர்ஸ் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு எனது பையையும் எடுத்துக் கொண்டு என்னுடன் ரயில் நிலையத்திற்கு விரைந்தார். அங்கிருந்த விரைவு வண்டியில் ஏற்றி விட்டு மத்திய ரயில் நிலையத்தில் இறங்கி ப்ளாட்பார்ம் 23ல் ஸ்டுட்கார்ட் செல்லும் ரயிலை பிடிக்கச் சொல்லி விடை கொடுத்தார்.

எனக்கு அந்த அசதியிலும் ஆச்சரியம். மனித  ரூபத்தில் தெய்வம் என்று சொல்வோமே.. அப்படி.. இனம் மொழி கடந்த தேசங்களிலும் மனித நேயம், ஒருவருக்கு ஒருவர் உதவுதல் என நல்ல உள்ளங்களை அவ்வப்போது நான் பார்க்கின்றேன். அதில் நேற்று இப்படி ஒரு அனுபவம்.

இந்த ரயில் 10:37க்கு வந்து  சேரவேண்டும். துரதிர்ஷ்டம். 10:58க்கு தான் மூன்ஷன் மத்திய ரயில் நிலையம் வந்தது இந்த ரயில். இங்கேயும் சோதனையா என நினைத்துச் சென்றால் நான் போக வேண்டிய ரயில் நின்று கொண்டிருந்தது.  பனி கொட்டி தண்டவாளம் நிரம்பிய பிரச்சனையால் ரயில்களின் வருகை தாமதிக்கப்பட அக்காரணத்தால் இந்த நிலை. இந்த  சூழலிலும் ஒரு நல்லது நடந்திருக்கின்றது என்று மனதிற்குள் எனக்கு சந்தோஷம்.

உள்ளே அமர்ந்து சற்று நேரத்தில் ரயில் புறப்ப ட்டது. டிக்கட் பரிசோதிக்கும் அதிகாரி வர அவரிடம் என் நிலையை தெரிவித்தேன். பொதுவாக  ஜெர்மனியில் டிக்கட் பரிசோதிக்கும் அதிகாரிகள் எந்த காரணங்களையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனக்கு நேற்று அதிர்ஷ்டம் இருந்திருக்கின்றது. என்னிடம் மிக அன்பாகப் பேசி கவலையே வேண்டாம். இந்த விமான டிக்கட்டே போதும் என்று சொல்லி விட்டார். உங்களை பாதியில் எங்கும் இறக்கிவிடமாட்டேன். கவலைப்படாமல் இருங்கள் என்று சொல்லி புன்னகை செய்து விட்டு சென்றார் அந்த மனிதர். மீண்டும் மனித வடிவில் தெய்வம்.

ஸ்டுட்கார்ட் ரயில் நிலையம் வந்து சேர மணி காலை 2:50 ஆகிவிட்டது. எனது வாகனத்தை நான் ஸ்டுட்கார்ட் விமான நிலையத்தில் வைத்திருந்தேன். ஆக என் வாகனத்தை எடுத்துக் கொண்டே வீடு போய்விடலாமே.. அதற்கு டாக்ஸி வந்தால் நன்றாக இருக்குமே என நினைக்கையிலேயெ ஒரு டாக்ஸி வந்தது. அதில் ஏறிக் கொண்டு ஸ்டுட்கார்ட் விமான நிலையம் போகச் சொன்னேன். டாக்ஸி ஓட்டி வந்தவர் ஒரு பாக்கிஸ்தானியர். என்னுடன் கொஞ்சம் கதை பேசிக் கொண்டே வந்தார். 25 நிமிடத்தில் விமான நிலையத்தில் என் வாகனம் இருக்கு மிடம் வந்து சேர்ந்தேன். அந்த  மனிதரும் டாக்ஸி ஓட்டி என்றில்லாமல் நான் பார்க்கிங் காசை கட்டி விட்டு பனியை காரிலிருந்து சுத்தம் செய்து காரில் ஏறும் வரை காத்திருந்து பின்னர் கையசைத்து பை சொல்லி விட்டு புறப்பட்டார்.  மீண்டும் மனித  வடிவில் தெய்வம்.

வீடு வந்து சேரும் போது காலை 3:15 ஆகியிருந்தது.

மூன்ஷனில் நேற்று இரவு மட்டும் 160 விமானங்கள் தடை செய்யபப்பட்டிருந்தன. ஆக எத்தனை பயணிகள் என்னென்ன சிரமத்திற்குள்ளானார்களோ.. எப்படி சமாளித்து வீடு சேர்ந்தார்களோ என்ற நினைப்பே எனக்கு மனதில் இன்று காலையில்.



இன்றும் பனி கொட்டிக் கொண்டிருக்கின்றது. பனியில் விமான நிலயத்தை சுத்தம் செய்யும் ஊழியர்களாகட்டும் விமான கம்பெனிகளின் ஊழியர்களாகட்டும்.. இம்மாதிரியான ச்=சூழலில் அவர்களது சேவை பாராட்டுதற்குறியது. இன்று காலை Lufthnsa வலைப்பக்கத்தில் எனது நன்றியை தெரிவித்து சிறு கடிதம் அனுப்பினேன். மனதிற்குள் அவர்களை நினைத்து பெறுமிதமும் மகிழ்ச்சியும் கொண்டேன்.

சுபா