1989ல் ஹெல்முட் கோல் அவர்கள் சேன்சலராக இருந்த பொழுது, இப்போதைய அமெரிக்க அதிபரின் தந்தை புஷ் ஜெர்மனிக்கு சிறப்பு விஜயம் செய்திருந்தார். அப்போது அவருக்கு ஜெர்மானிய மக்களிடமிருந்து மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் வருகின்ற 23ம் தேதி ஜெர்மனிக்கு வருகை தரவிருக்கும் புஷ் எப்படிப்பட்ட வரவேற்பை பொதுமக்களி
டமிருந்து பெற்றுக் கொள்ளப்போகிறார் என்பது இப்போது ஒரு புதிராகத்தான் இருக்கின்றது. BBCயின் ஒரு ஆய்வில் 77% ஜெர்மானிய மக்களின் சிந்தனையில் அமெரிக்க அதிபர் புஷ் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு ஒரு அபாயகரமான ஒன்று என்று அவர்கள் நினைப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் படித்ததாக ஞாபகம்.
இப்போதைய சூழ்நிலையில் பொதுவாக ஜெர்மானிய மக்களுக்கு அமெரிக்க அதிபர் புஷ் மக்களின் மனம் கவர்ந்த ஒருவரல்ல. ஈராக் போர் ஆரம்பித்த காலம் தொட்டு இந்த மனப்போக்கு பெரிதாக வளர்ந்து வந்திருக்கின்றது. பொதுமக்கள் மட்டுமன்றி அரசாங்கத் தலைவர்களும் புஷ்ஷுக்கு எதிர்ப்பான தங்கள் அபிப்ராயங்களையே முன் வைத்து செயல்பட்டனர், அச்சமயத்தில். போர் ஆரம்பித்த பின்னர் சிலமுறை இரண்டு நாடுகளின் அரசியல் தூதுவர்களிடையே பல சமாதான தூது போகும் நிகழ்வுகள் நடந்தன. கடந்த ஆண்டு ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர் பிஷர் அமெரிக்கா சென்று வந்தததும் இந்த முக்கிய நோக்கத்தோடுதான். ஆனாலும் பெரிதாக எந்த பலனும் கிடைத்தபாடில்லை. இதற்கிடையே ஜெர்மனியின் மிகப் பிரபலமான ஒரு எதிர்கட்சியின் தலைவியான அங்கேலா, புஷ்ஹுக்கு சாதகமாக பல வேளைகளில் தனது அபிப்ராயங்களை வெளியிட்டிருக்கின்றார். மிக வித்தியாசமாக சிந்திக்கக் கூடிய அங்கேலா இப்படி புஷ்ஷுக்குச் சாதகமாகப் பேசுவதை அவருடைய ஆதரவாளர்களில் சிலர் கூட எதிர்த்திருக்கின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற பனிப்பேய் விரட்டும் வைபவமான ரோஸன் மோண்டாக் வீதி உலா வைபவத்தின் போது புஷ்ஷையும் அங்கேலாவையும் கேலி பேசும் ராட்ஷச பொம்மைகளையும் ஊர்வலத்தில் சேர்த்திருந்தனர்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது ஜெர்மனிக்கு ஒரு நாள் வருகை மேற்கொள்ளவிருக்கும் புஷ்ஷைப் பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பி வைக்கவேண்டுமே என்பதில் தான் பாதுகாப்பு அதிகாரிகள் குறியாக இருக்கின்றார்கள். தொலைக்காட்சி
செய்தியில், ஒரு அதிகாரி குறிப்பிடும் போது, "கிளிண்டண், கோர்பாஷொவ், போப், ரீகன், ஷீராக் என் பல முக்கியஸ்தர்களை வரவேற்றிருக்கின்றோம். ஆனால் இப்போது புஷ்ஷை பாதுகாப்போடு வரவேற்பது தான் எங்களுக்கு வந்திருக்கும் மிகப் பெரிய சவால்" என்று குறிப்பிடுகின்றார்.
23ம் தேதி ப்ராங்பெர்ட்டின் ஒரு பகுதி நெடுஞ்சாலை புஷ் வருகைக்காக மூடப்படவிருக்கின்றது. மிக அழகிய நகரமான மைன்ஸ் நகரைக் கடந்து ரைன் நதிக்கரை ஓரத்தில் இருக்கும் குர்பூர்ஸ்லிஷஸ் அரண்மனையில் புஷ் அரசியல் பிரமுகர்
களை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.
அருகாமையில் உள்ள சில பள்ளிகளுக்கும் அன்று விடுமுறையாம். இப்படி ஏகப்பட்ட ஏற்பாடுகள்.
இரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கப் பாதுக்காப்புத் துறைச் செயலாளர் ரம்ஸ்பீல்ட் மியூனிக் நகருக்கு வருகை தந்திருந்த போதும் இதே நிலை தான். பாதுகாப்புக் காரணங்களைக் கருதி போக்குவரத்தில் நிறைய மாறுதல்கள். ஒரு வார இறுதியில் நாங்கள் சற்றே சிரமத்திற்கு உள்ளானோம். ரம்ஸ்பீல்ட் வருகையை எதிர்த்து பேரணிகள் நடைபெற்றன. ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுப்பதை எதிர்த்து நடைபெற்ற பேரணி அது. சென்ற வாரம் , மீண்டும் மியூனிக்-கில் ரம்ஸ்பீல்ட் வருகை , மீண்டும் பாதுகாப்புப் பிரச்சினைகள், மீண்டும் பேரணிகள் . ஆனால் இம்முறை ஈரான் மீது தாக்குதல் கூடாது என்ற எதிர்ப்புப் பேரணி. சிலர் கைது செய்யப்பட்டனர் என்றும் தொலைக்காட்சிச் செய்தியில் பார்த்தேன்.
ReplyDelete