கடந்த ஒரு வருடமாக நான் ஸ்டுட்கார்ட் நகரத்திலுள்ள விநாயகர் ஆலயத்தில் வீணை வாசிக்கக் கற்றுக் கொண்டிருக்கின்றேன். ஆசிரியர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த இசை தம்பதியர். கணவர் வயலின் கற்றுக் கொடுக்க மனைவி வீணையும் வாய்ப்பாடும் சொல்லித் தருகின்றார். இதுவரை வகுப்பு மிக நன்றாக நடந்து கொண்டுதானிருந்தது. ஏறக்குறைய 30 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். கடந்த வாரம் வகுப்புக்குச் சென்ற போது ஆசிரியர் தம்பதிகள் வகுப்புக்களை நிறுத்தப்போவதாக சொன்ன போது அதிர்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை. காரணம் இது தான்.
முதலில் ஸ்டுட்கார்ட் நகரில் ஒரு விநாயகர் ஆலயம் இருந்தது. நிர்வாகத்தில் ஏற்பட்ட பூசலில் இந்த ஆலயம் இரண்டாகப் பிரிந்து மூலவிக்ரகத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர் ஒரு குழுவினர். அதன் பிறகு தொடக்கத்திலிருந்து இந்த ஆலயத்தை ஆரம்பித்து நடத்தி வருபவர்கள் இந்தியாவிலிருந்து சுவாமி சிலைகளை வரவழைத்து, ஒரு கட்டிடத்தின் 2ம் தளத்தில் இந்தக் கோயிலை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். மூலவிக்ரகத்தை எடுத்துச் சென்ற மற்றொரு குழுவினர் இந்த கோயில் இருக்கும் இடத்திலிருந்து 15 கிமீ தூரத்திலேயே இன்னொரு ஆலயத்தை அமைத்து அதனை பராமரித்து வருகின்றனர். இரண்டு ஆலயங்களுக்கும் ஒரே பெயர். ஒரு ஆலயத்திற்குச் செல்பவர்கள் மற்ற ஆலயத்திற்குச் செல்லக்கூடாது என்பது மாதிரியான எழுதா சட்டம் வேறு. ஆக ஒரு ஆலயத்தில் இசை வகுப்பு நடப்பதால் மற்ற கோயிலுக்குச் செல்பவர்கள் இந்த இசை வகுப்பில் கலந்து கொள்ளமுடியாத நிலை. படிப்படியாக வந்து கொண்டிருந்த 30 மாணவர்களில் பலர் நின்று விடவே இப்போது 10 மாணவர்கள் மட்டுமே ஆசிரியர் குடும்பத்திற்கு மிஞ்சியிருக்கின்றனர்.
இந்த வகுப்புக்களின் வழி தான் அவருக்கு மாத வருமானமே. இப்படிப் பட்ட நிலையில் இவர்கள் என்ன செய்ய முடியும்?
ஜெர்மனியில் பொதுவாக மூலைக்கு மூலை Volkshochschule எனப்படும் கல்விக் கூடங்கள் இருக்கின்றன. பொதுவாக இங்கு ஜெர்மானிய, ஆங்கில, ப்ரெஞ்சு போன்ற மொழிகளோடு மற்ற ஏனைய இசைக் கருவிகள் வாசித்தல், சமையல், தையல் கலை, கைவினைப் பொருட்கள் செய்யும் கலை போன்றவற்றிற்கான வகுப்புக்களும் நடக்கின்றன. ஆக எங்கள் இசை ஆசிரியரிடம் இந்த Volkshochschule மாதிரியான பள்ளிகளில் பதிந்து கொண்டு வகுப்புக்களை நடத்த ஆரம்பிக்க வேண்டியது தானே. தமிழர்கள் மட்டுமன்றி மற்ற இனத்தவரும் சேர்ந்து படித்து தெரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்குமே என்று சொல்லிப் பார்த்தேன். அதற்கு அவர் கூறிய பதில் வேதனைக்குறியது.
இப்போது 30EUR ஒரு மாணவருக்குக் கட்டணம் விதிக்கிறோம். அதையே அங்கே செய்ய முடியாது. ஏனென்றல் குறைந்த பட்சம் 50EUR கட்டணம் வசூலிக்க வேண்டும். மற்ற இனத்தவர் நடத்தும் வகுப்புக்களின் சராசரி கட்டணம் இப்படித்தான் இருக்கின்றது. அதோடு இந்த வகுப்புக்களை நடத்த இடம் தருவதால் பள்ளி நிர்வாகத்தினருக்கும் குறைந்த பட்சத் தொகையாக (ஏறக்குறைய 100 அல்லது 200 EUR ) தரவேண்டியிருக்கும். 50க்கு கட்டணத்தை உயர்த்திவிட்டால் இப்போது வருகின்ற தமிழ் மாணவர்கள் கூட அப்போது வரமாட்டார்கள். 50 EUR என்பது மிகப்பெரிய தொகையாகிவிடும். வகுப்புக்களைத் திறமையாக சிறப்பாக நடத்த Volkshochschule பள்ளிகளில் நடத்துவது தான் சிறந்தது. ஆனால் இது எங்களுக்கு ஒரு விஷப்பரீட்சையாக முடிந்து விட்டால் எங்களுக்குத்தான் பிரச்சனை" என்று சொல்லி வருந்தினார்.
ஆக இரண்டு பிரச்சனைகள் இங்கு முன் நிற்கின்றன.
1. பிளவு பட்டுக் கிடக்கும் ஸ்டுட்கார்ட் தமிழ் மக்களால் பரிதாபமாக இந்த இசை வகுப்பு பாதியிலேயே நிற்க வேண்டிய நிலை வந்து விட்டதே என்பது.
2. தெய்வீக அனுபவத்தை ஈட்டித் தரும் இசையைக் கற்றுக் கொள்ள பணத்தை ஒரு காரணமாகக் காட்டி வகுப்புக்களுக்கு வராமல் நின்று விடுவதா என்பது.
நல்ல பண்புகளையும் நல்லனவற்றையும் தூரத்தள்ளி வைத்து வெறுப்பை வளர்த்துக் கொள்வதால் யாருக்குப் பயன்? தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த விதண்டாவாதப் போக்கினால் யாருக்கும் நண்மை ஏற்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. இழப்புக்கள் தான் அதிகரிக்கின்றன!
மிகவும் வருந்ததக்க விசயம். உலகின் ஒவ்வொரு மூலையிலும், உங்கள் ஆசிரியரை போல சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ReplyDeleteஎன்ன செய்வது? விநாயகர் தான் இவர்களின் சிந்தனையை மாற்றி அமைக்க வேண்டும்.
ReplyDeleteஆலயம் என்றிராமல் பொதுவான community hall ஒன்றில் கூடி இம்மாதிரி வகுப்புக்களை நடத்தலாம். முன்பு கணினி வகுப்பு (Pro Srilanka) நடந்த மாதிரி.
ReplyDelete