Monday, February 21, 2005

பீஸா போட்டி



சனிக்கிழமை உள்ளூர் ஜெர்மானிய தொலைக்காட்சி சேனல் ZDF -ல் ஒலியேறிய Wetten Dass நிகழ்ச்சியில் சுவாரசியமான ஒரு நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. இது மக்களிடையே புதைந்துள்ள வித்தியாசமான திறமைகளை வெளிக்காட்டும் ஒரு நிகழ்ச்சி.

இதில் கலந்து கொள்ள 4 குழுக்கள்/தனிபர் வந்திருந்தனர். அதில் ஒன்று என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.

2 நண்பர்கள். இவர்களுடைய திறமை என்னவென்றால் எந்த விதமான ரெடி மேட் பீஸா (Pizza) வாக இருந்தாலும் கண்களை மூடிக் கொண்டே அந்த பீஸாவின் பெயரை சொல்லிவிடுவதுதான். இந்த இருவரும் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் மிக அதிகமாக பீஸாவையே முக்கிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையிருந்ததால் அவர்களுக்கு உள்ளூரில் கிடைக்கக்கூடிய எல்லா brand பீஸாவும் அத்துப்படி. "எந்த பீஸாவாக இருந்தாலும் கொடுங்கள். கண்களை மூடிக் கொண்டு அது என்ன பீஸா என்று சொல்லி விடுவோம்" என்று சவால் விட்டுக் கொண்டு வந்திருந்தனர்.

இவர்களுக்கு நான்கு வாய்ப்புக்கள் தான் வழங்கப்படும். இந்த நான்கிலும் சரியான பீஸாவை பெயரைச் சொன்னால் அடுத்த கட்ட சோதனைக்குச் சென்று பிரமாதமான பரிசுகளைத் தட்டிச் செல்ல முடியும்


இவர்களை சோதிப்பதற்காக ஜெர்மனியில் கிடைக்கக்கூடிய ஏறக்குறைய 200 விதமான பீஸாக்களை வரவழைத்து அதனை பெரிய குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டனர். இது கண்ணாடியால் ஆன குளிர்சாதனப் பெட்டி. நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கும் தெரியும் வகையில் பீஸாக்களை இந்த கண்ணாடி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டனர். இதில் இத்தாலியன், ஆசியன், கொரியன், அமெரிக்கன் பீஸாக்களும் அடங்கும். இப்போது மிகப் பிரபலமாக உள்ளூர் அங்காடிகளில் கிடைக்கக்கூடிய Big Pizza வகைகளும் அடங்கும்.




இரண்டு நண்பர்களையும் கண்களைக் கட்டி ஒருவருக்கு முன் ஒருவரை அமர வைத்து விட்டனர். கண்கள் நன்றாக மறைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டபின் சோதனை ஆரம்பமானது. இந்த பீஸா குவியலிலிருந்து ஒன்றை எடுத்து அதன் அட்டைகளை உருவி விட்டு ஒருவர் கையில் வைக்க, அதனை விரல்களால் தொட்டுப் பார்த்தே அதில், காளான் அல்லது மிலகாய், அல்லது டூனா, காய்கறிகள் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே 4 பீஸாக்களையும் நண்பர்கள் கண்டு பிடித்து விட்டனர். ஒவ்வொரு பீஸாவையும் நிகழ்ச்சி நடத்துனர் இவர்கள் கையில் கொடுக்கும் போது எனக்கு சந்தேகம் தான். எப்படி இவர்கள் சரியாக இதன் brandஐ கண்டுபிடிக்கப் போகின்றார்கள் என்று. ஒவ்வொரு சோதனைகளையும் இரண்டு நிமிடங்களுக்குள் செய்து முடித்து வெற்றி பெற்றனர் இந்த நண்பர்கள். ஏந்த வகை பீஸா என்று கூட சுலபமாக சொல்லிவிட முடியும். ஆனால் அது எந்த brand என்று கண்டு பிடிப்பது அவ்வலவு சுலபமான காரியம் இல்லையே. சீஸ் பீஸாவிலேயே 30 வகை இங்கு கிடைக்கின்றன. அதேபோலத்தான் டூனா பீஸாக்களிலும் 20 / 30 வகைகள். இப்படியிருக்க இவர்களால் இப்படி பிரித்து இனம் கண்டு பிடிக்க முடிந்ததைப் பார்த்து என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. இதுவரை பார்த்திராத, மிக மிக ஆச்சரியப்பட வைத்த சுவாரசியமான போட்டி இது.

1 comment:

  1. அவர்களுக்கு கொரியா வந்தால் சோதனை! இங்கு உருளைக்கிழங்கு பிட்சா, சீனிக்கிழங்கு (சர்க்கரைவள்ளிக்கிழங்கு) பீட்சா என்று லோகல் டேஸ்ட்டுக்கு ஏற்றவாறு உள்ளன!

    ReplyDelete