Tuesday, December 2, 2003

Job Bank!

நேற்று, டிசம்பர் 1 அன்று அதிகாரப்பூர்வமாக ஜெர்மனியின் வேலையில்லாதவர்கள் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்வதற்கும், தங்கள் இல்லத்திலிருந்தவாறே உள்நாட்டில் வேலை தேடுவதற்குமாக பிரத்தியேகமாக வலைப்பக்கம் ஒன்றினை ஜெர்மனி அரசாங்கம் ஆரம்பித்து வைத்தது. உள்நாட்டில் உள்ள 3 மில்லியன் வேலை தேடும் மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏகப்பட்ட கெடுபிடிகள்; பிரச்சனைகள்; ஏற்பாட்டு நடவடிக்கைகள்; இதனை நேரடியாக கண்டும் உணர்ந்தும் அனுபவித்துக் கொண்டிருக்கும் எனக்கும் எந்த வகையில் தொடர்ந்து இந்த வலைப்பக்கம் செயல்படப்போகின்றது என்பதில் ஒரு ஆர்வம் இருக்கின்றது. சில தனியார்
நிறுவனங்களோடு சேர்ந்து எங்கள் நிறுவனமும் இதில் கணிசமான சேவையை நேரடியாக வழங்குவதால் தான் எனக்கும் கொஞ்சம் கூடுதல் ஆர்வம்.

பலமுறை பல்வேறு வகையான சோதனைகளைக் கணினிகளுக்கு வழங்கி சோதித்துப் பார்த்து விட்ட பிறகும் முதல் நாளன்றே ஏகப்பட்ட பிரச்சனைகள் பிறக்கத் தொடங்கி விட்டன. வேலையில்லாதவர்களுக்குப் பல நாள் காத்திருந்த ஆர்வம். வலைப்பக்கம் வந்து விட்டது என்று உள்நாட்டு செய்தி நிறுவனங்கள், பத்திரிக்கைகள் அனைத்தும் செய்திகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் போது பொது மக்கள் இந்த வலைப்பக்கத்திற்குச் செல்லாமல் இருப்பார்களா? எத்தனை நாட்கள் இந்த வசதிக்காக காத்திருந்திருப்பார்கள்?

முன்பெல்லாம் வேலை தேடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலையத்திற்குச் சென்று அங்கு தங்கள் பெயர்களைப் பதிந்து கொண்டு அதன் பின்னர் அங்கேயே பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சில கணினிகளைக் கொண்டு தகவல் வங்கியில் வேலைகளைத் தேடுவர். இதற்கென்று தனியாக நேரமும் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் ஜெர்மனியில் வேலை தேடுபவர்களுக்கு இனிமேல் இந்த தொல்லையே இல்லை. உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் ஜெர்மனியில் வேலை தேடுவதற்கான வசதி இப்போது உருவாக்கப்பட்டு விட்டது.

மாலையாவதற்குள் வலைப்பக்கத்திற்கு சேவை வழங்கும் web server அதிகமான பயனீட்டைத் தாங்க முடியாமல் திக்கித் திணர ஆரம்பித்து விட்டது. மில்லியன் கணக்கில் மக்கள் வலைப்பக்கத்திற்குள் சென்று தங்கள் பெயரை பதிய முயலும் போது பாவம் அந்தக் கணினி; அதனால் என்ன செய்ய முடியும். இதைப் பலரும் சத்தியமாக எதிர்பார்க்க வில்லை. ஆனாலும் அதிவேக கணினி; பல புதிய தொழில் நுட்பங்களை தன்னுள்ளே கொண்ட கணினி. ஓரளவு சமாளிக்கவே செய்தது. அலுவலகத்தில் இன்று இது தான் எங்களுக்குப் பேச்சாகிப் போனது. எதிர்பார்த்ததை விட ஒரே நாளில் தகவல் வங்கி மிக மிக மிக பெரிதாக வளர்ந்து விட்டது ஒரே நாளில்.

ஜெர்மனியில் வேலையில்லா நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே தான் வருகின்றது. இந்த இணையத் தொடர்பினை வழங்கும் கணினி சேவை எந்த அளவிற்கு இந்த நிலையை எதிர்கொள்ள முடியும் என்பதை காலம் தான் சொல்ல முடியும்.!

No comments:

Post a Comment