ஜெர்மனியின் மிக முக்கிய நகரங்களில் பெர்லினும் ஒன்று. இந்நாட்டின் தலைநகரமாக இருப்பது மட்டுமன்றி கலாச்சார மையமாகவும் திகழ்வதுதான் பெர்லின் நகரின் தனிச்சிறப்பு என்று சொல்ல வேண்டும்.
முன்னர் கிழக்கு-மேற்கு பெர்லின் என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்த பெர்லின் இப்போது ஒரு தனி நகரமாக இருந்து வருகின்றது. பெர்லின் சாலைகளில் நடக்கும் போது மற்ற நகரங்களில் இல்லாத அளவிற்கு பல இன மக்களை சர்வ சாதாரணமாக இங்கு காணமுடியும் என்பது முற்றிலும் உண்மை. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெர்மனியின் வாசலாக இருப்பது பெர்லின் தான். பல நாடுகளிலிருந்து அகதிகளாக ஜெர்மனிக்குள் நுழைபவர்கள் பெர்லினைத்தான் மையமாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பது அதிகாரப்பூர்வமாகக் காவல்துறை வெளியிட்டிருக்கும் ஒரு செய்தி.
ஸ்டுட்கார்ட் நகரில் எனது அலுவலகத்தில் என்னோடு வேலை செய்து கொண்டிருந்த எனது இனிய நண்பன் ஸ்வென், ஸ்டுட்கார்ட் நகரின் அவசர வாழ்க்கை பிடிக்காமல் வேலையை உதறி விட்டு வாழ்க்கையை இனிமையாக கழிக்க வேண்டும் என முடிவெடுத்து பெர்லினுக்குச் சென்று விட்டான். பெர்லின் சாலைகளில் இருக்கும் தெருவோரக் கடைகளில் இயற்கையயும் வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டு பியர் சாப்பிட்டு வாழ்க்கையை சுகமாகக் கழிப்பதாக (நிரந்தர வேலையில்லாவிட்டாலும்) அவ்வப்போது அவன் எனக்கு தகவல் அனுப்புவதுண்டு.
ஜெர்மனி முழுக்க இருக்கும் மக்கள் தொகையில் பெர்லினில் தான் மிக அதிகமானோர் வேலையில்லாமல் இருப்பதாக கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன. அதில் இன்னொரு அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் ஜெர்மனியின் இந்த புகழ் பெற்ற நகரம் இப்போது மாநிலத்தின் (பெர்லின்) செலவுகளை எதிர் கொள்ள முடியாமல் திண்டாடுகின்றது என்ற செய்திதான். பெர்லினிலுள்ள ஒரு புகழ் பெற்ற தொல்பொருட்காட்சி நிலையம் அதற்கான பாதுகாப்புச் செலவுகளைப் பெற முடியாததால் இப்போது மூடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இந்த மாநிலத்தின் முதல்வர் மத்திய அரசாங்கம் தங்கள் மாநிலத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று அறை கூவல் விடுத்திருந்தார். இதுதான் இன்றைய பெர்லினின் நிலமை.
ஜெர்மனி பொருளாதார மறு சீரமைப்பு செய்வதில் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் பலனாக இப்போது பல புதிய தொழில் வாய்ப்புக்கள் மலர ஆரம்பித்து சில நடுத்தர வகை நிறுவனங்கள் இலாபம் ஈட்ட ஆரம்பித்திருப்பதாக நேற்றைய வர்த்தக செய்தியில் கேள்விப்பட்டேன். பல மாதங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் ஒரு நல்ல செய்தி. இந்த நிலை தொடரவேண்டும்!
No comments:
Post a Comment