சில நாட்களுக்கு முன்னர் போப்லிங்கன் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழ் நண்பர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். பல பொது விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் பேச்சு ஐரோப்பாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களிடையே இருந்து வரும் திருமண வரதட்சணைப் பற்றியும் ஆரம்பித்தது.
நான் 1996-ல் 2 வார காலம் இலங்கைப் பயணம் சென்றிருந்த போது, அங்கு உள்நாட்டிலிருந்து வெளியாகும் தினசரிப் பத்திரிக்கையைப் படிக்கும்போது வரன் தேடுவோரின் பட்டியல் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றி வெளிவந்திருந்த விளம்பரங்களைப் பார்த்ததைப் பற்றி அவர்களிடம் விவரித்தேன். ஒரு மருத்துவராக வேலை செய்யும் பெண்ணுக்கு மாப்பிள்ளைத் தேடும் பெற்றோர் பெண்ணோடு சேர்த்து லட்சக் கணக்கில் வரதட்சணை மற்றும் ஒரு முழு வீடு போன்றவற்றையும் சேர்த்துத் தருவதாக குறிப்பிட்டிருந்தது என் ஞாபகத்தில் இன்றும் மறையாமல் இருந்தது. அதைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது ஐரோப்பாவிற்கு வந்த பின்னர் வரடதட்சணை என்பது எந்த அளவிற்கு மேலும் வளர்ந்திருக்கின்றது என்று நண்பர்கள் சொன்னதைக் கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது.
சில மாதங்களுக்கு முன்னர் ஜெர்மனியில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கு லண்டனில் இருக்கும் மாப்பிள்ளைக்கும் திருமணம் நடத்தியிருக்கின்றார்கள். அதற்கு பெண் வீட்டர் சார்பாக 100 பவுன் நகை மற்றும் ஏறக்குறைய 1 லட்சம் இங்கிலாந்து பவுனும் (ரொக்கம்) கொடுத்திருக்கின்றார்கள். பெண் ஒரு புத்தகக் கடையில் விற்பனையாளராக வேலை செய்கின்றாள். மாப்பிள்ளை லண்டனில் ஒரு கடையில் வேலை செய்கின்றார். என்ன நடந்ததோ தெரியவில்லை. திருமணம் நடந்து ஒரு மாதம் முடிவதற்குள் அந்தப் பெண் சேர்ந்திருக்கப் பிடிக்காமல் ஜெர்மனிக்குப் பிடிவாதமாகத் திரும்பிவிட்டாள். முதலில் பெற்றோர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லையாம். பின்னர் வேறு வழிய்ல்லாமல் பெண்ணை திரும்ப அழைத்துக் கொண்டார்களாம்.
இவ்வளவு வரதட்சனை கொடுத்தும் கூட நிம்மதியற்ற திருமணமாகவே இது முடிந்திருக்கின்றது. இதைபோல பல கதைகள் இங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கல்வியும் வாழ்க்கை தரமும் உயர்ந்து வரும் போது மனித நேயமும் பண்பும் வளர வேண்டும் என நாம் எதிர்ப்பார்ப்பது இயற்கை. ஆனால் இங்கு நிலைமை சற்று வித்தியாசமாகவே மாறிக்கொண்டிருக்கின்றது. அதிகமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமைகின்ற போது 'அதிகமாக எங்களால் வரதட்சனை கொடுக்க முடியும்' என்று பெண்ணைப் பெற்றவர்கள் நினைப்பதும், 'ஐரோப்பாவில் தானே பெண் இருக்கின்றாள். அதிகமாகவே வரதட்சணை கொடுக்கட்டுமே' என்று மாப்பிள்ளை வீட்டாரும் நினைக்கும் மனப்போக்கு வளர்ந்து கொண்டு வருகின்றது. இங்கேயே வளர்ந்து படித்து வரும் தமிழ் இளைஞர்கள் இதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதை மறுக்க முடியாது. சில மாதங்களுக்கு முன்னர் நான் பேசிக்கொண்டிந்த 16 வயது தமிழ் பெண் ஒருத்தி இந்த மனப்போக்கை பற்றி தனது பெற்றோர் முன்னிலையிலேயே குறை கூறி பேசிய போது அவளுடைய சிந்தனை வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்தேன். இளம் தலைமுறையினர் தாம் நமது சமுதாயத்தில் மேலும் படர்ந்துள்ள விலங்குகளைப் போக்க முடியும் என்பதை இந்தப் பெண் போன்றவர்களைப் பார்க்கும் போது உணர்ந்து சந்தோஷப்பட முடிகின்றது.
No comments:
Post a Comment