சுவிஸர்லாந்தின் பெர்ன் கலைக்கூட அருங்காட்சியகத்திற்கு 1400 விலை மதிப்பற்ற கலைப்பொருட்கள் கடந்த இரண்டு நாட்களில் சொந்த மாகியுள்ளன.
இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களிடமிருந்து ஏராளமான கலைச் சிற்பங்களும் சித்திரங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. பலர் இதில் ஈடுபட்டனர் என்பது பரவலாக அறிந்த விஷயமும் கூட. இவ்வாண்டு ஆரம்பத்தில் ஜோர்ஜ் க்ளூனி நடித்து வெளிவந்த தி மோனுமெண்ட்ஸ் மேன் திரைப்படத்தின் மையக் கருத்தும் இதனைக் கொண்டதே.
அடோல்ஃப் ஹிட்லரின் கலைப்பொருள் விற்பனைத் தொடர்பாளர் குர்லிட்டின் மகன் இரண்டு நாட்களுக்கு முன்னர் தமது 81 வயதில் மரணமடைந்தார். இவர் தமது தந்தை சேகரிப்பில் மறைத்து வைத்திருந்த1400 கலைப்பொருட்களை பற்றி எந்த விபரங்களையும் வெளியிடவில்லை. இவர் கடந்த பல ஆண்டுகளாக வெளி உலகத் தொடர்புகளை மிகக் குறைத்துக் கொண்டு மூனிக் நகரில் உள்ள தமது பிரமாண்டமான அப்பார்மெண்ட்டில் தனியாகவே வாழ்ந்து வந்தார்.
2010ம் ஆண்டில் ஒரு முறை ஒன்பதாயிரம் யூரோவுடன் இவர் ஜெர்மனியிலிருந்து சுவிஸர்லாந்து கடந்து சென்ற ஒரு பயணத்தில் போலீஸார் விசாரனை செய்ய அது முதல் ரகஸிய உளவுத்துறையின் தேடுதலுடன் இவரிடம் விலை மதிக்க முடியாத யூதர் காலத்தில் கொள்ளயடிக்கப்பட்ட பல கலைப்பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்க முடிந்தாலும் அவற்றை தக்க ஆதாரங்களுடன் கைப்பற்றுவது முடியாத காரியமாக இருந்தது. இவர் தம்மை பிறர் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இணையத் தொடர்பையும் கடந்த சில காலங்களில் முழுதாகத் துண்டித்துக் கொண்டாராம்.
கடந்த 7ம் தேதி, இருதய அருவைச் சிகிச்சையில் இவர் மரணமடைந்தார். ஜெர்மனிக்கே இந்த கலைப்படைப்புக்கள் சொந்தமாக வேண்டும் என்று முதலில் முடிவானது. ஆனால் கோர்னாலியுஸ் குல்ரிட் தனது சேகரிப்பில் உள்ள அனைத்து கலைப்படைப்புக்களும் சுவிஸர்லாந்தின் பெர்ன் கலைக்கூட அருங்காட்சியகத்திற்குச் சேரவேண்டும் என கடந்த 10 நாட்களுக்கு முன்னர் உயில் எழுதி வைத்திருக்கின்றார். தன்னை ஒரு குற்றவாளி போல ஜெர்மனி நடத்தியது என்பதால் தனது உயிலில் இவை அனைத்தும் தமது மறைவுக்குப் பின்னர் சுவிஸர்லாந்துக்குச் சொந்தமாக வேண்டும் என இவர் தன் உயிலில் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஒரு பில்லியன் யூரோ என மதிப்பிடப்படும் இவை அனைத்தும் பல கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவானவை. உலகப் புகழ்பெற்ற கலைஞர்களான ரெனொயர், பிக்காஸொ, பெக்மான், சாகில் ஆகியோரது படைப்புக்களும் இதில் உள்ளன. 1930 - 1940 வரையிலான கால கட்டத்தில் சேகரிக்கப்பட்டவை இவை.
ஜெர்மானிய அரசு இந்த கலைப்படைப்புக்கள் ஜெர்மனிக்கும் சொந்தமாக வேண்டியது என இப்போது முயற்சி மேற்கொண்டு வருகின்றது. முடிவு எது வானாலும் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1400 கலைப்படைப்புக்கள் விரைவில் பொது மக்கள் பார்வைக்கு வரும் என்பது நல்ல செய்தி!
சுபா
No comments:
Post a Comment