Saturday, March 1, 2014

ஸ்டுட்கார்ட் விநாயகர் ஆலயத்தில் மகா சிவராத்திரி - 2

ஸ்டுட்கார் நகரில் உள்ள ஒரு சிற்றூர் பாட் கான்ஸ்டாட். என் பல்கலைக்கழக படிப்பு முடித்து போப்லிங்கன் நகருக்கு வேலை கிடைத்து நான் குடிபெயர்ந்த போது எனக்கு இங்குள்ள இலங்கைத் தமிழ் நண்பர்களால் சித்தி விநாயகர் அறிமுகமானார்.

1999ம் ஆண்டு ஸ்டுட்கார்ட் நகரின் மத்தியில் ஒரு அலுவலக அறையில் ஒரு அலமாரிக்குள் சிறிய சித்தி விநாயகர் சிலை இருந்தது. முதல் முறை இங்கு ஒரு வெள்ளிக்கிழமை மாலை சென்று பார்த்த போது எனக்கு மனதில் ஏகப்பட்ட சந்தோஷம். 

அறை முழுதும் தமிழ் மக்கள். சிறிய அலமாரிக்குள் சுவாமி சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டாலும் எல்லோரும் கூடியிருந்து பூஜை, பஜனை, சொற்பொழிவு, பிரசாதம் என மிக சந்தோஷமான அனுபவமாக அது எனக்கு அமைந்தது. அதற்குப் பின்னர் ஒரு சிலரின் கடின முயற்சிகளின் பலனாக பாட் காண்ஸ்டாட் நகரின் மையத்தில் ஒரு அலுவலகத்தில் இரண்டாம் மாடியை வாடகைக்கு எடுத்து அதில் சித்தி விநாயகருக்குk கோயில் கட்டினர். 

அதே நேரம் இத்தமிழ் நண்பர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட,  இரு பிரிவுகளாக இவர்கள் பிரிந்து செல்ல இரண்டு சித்தி வினாயகர் கோயில் பாட் கான்ஸ்டாட் நகரில் உருவாகியது.

ஒரு கோயிலிலிருந்து அடுத்த கோயில் நான்கு கிமீ தூரம் தான்.

இலங்கையிலிருந்து கைலாசநாத குருக்கள் வந்திருந்து அயல்நாடுகளில் நிலமில்லாத மாடிக் கட்டிடங்களில் பிரகாரம் அமைக்கும் வகையில் ஆகம விதிகளை குறிப்பிட்டு எழுதி அதற்கு தக்கவாறு  இந்தக் கோயிலை அமைத்தனர். 2002ம் ஆண்டில் மிகச் சிறப்பாக இங்கே யாகங்கள் செய்பட்டு வருடாந்திர திருவிழா என கோலாகலமாக பல சிறப்பு அம்சங்கள் நிகழ்ந்தன. ஸ்டுட்கார்ட் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில்  ஏறக்குறைய 500 தமிழ் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு விநாயகரின் அருள் நன்கு கிடைத்துக் கொண்டிருந்தது.

அடுத்த சில ஆண்டுகளில் கோயில் நிர்வாகத்தில் பிரச்சனை என தோன்ற இருந்த நண்பரகளில் இரு குழுக்களாகப் பிரிந்து விட்டனர்.

அடுத்த ஒரு சில ஆண்டுகள் ஆலய நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது. சென்ற ஆண்டும் மீண்டும் ஏதோ பிரச்சனை எழ ஒரு சிலர் பிரிந்து சென்று விட்டதாகத் தகவல் கிடைத்தது. 

இந்த ஆண்டு சிவராத்திரி பூஜைக்கு சென்றபோது ஒரு சிலரே வந்திருந்தனர். நிர்வாகத்தினருக்கும் மனதில் பல சங்கடங்கள் இருப்பது தெரிந்தது.

இங்கே பூஜையை முடித்துக் கொண்டு நானும் என் தோழி சாந்த்தாவும் அடுத்த விநாயகர் கோயிலுக்கும் சென்றோம். 

அங்கு நாங்கள் செல்லும் போது இரவு மணி 10 ஆகியிருந்தது. கோயிலில் சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

சொற்பொழிவு கேட்டு, அர்ச்சனை செய்து பிரசாதமும் பெற்று சாப்பிட்டு விட்டு இரவு இல்லம் திரும்பினோம்.

13 வருடங்களுக்கு முன்னர் சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்ட அந்த குதூகலம் இல்லையென்றாலும் ஆலயம் சென்று வரும் பாக்கியத்தை அமைத்துத் தந்திருக்கின்ரார்களே என்ற நிறைவு மனதில் எனக்கு தோன்றியது. இந்த இரண்டு கோயில்களையும்  பல பொருளாதார சிரமங்களுக்கிடையிலேயும் தொடர்ந்து  மேற்பார்வை செய்துவரும் அன்பர்களுக்கு நன்றி சொல்வதும் தேவை . இவர்கள் அனைவரது முயற்சியும் பாராட்டுதலுக்குறியது.

சுபா

3 comments:

  1. கோவிலுக்கு செல்வதே இவ்வளவு கடினமாக மாறிவிட்டது..!

    ஆனாலும் கோவிலை தொடர்ந்து நிர்வாகிப்பவர்களை பாராட்டியே ஆக வேண்டும் ..!

    ReplyDelete
  2. ஆமாம் நன்ண்பரே.

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete