Saturday, June 8, 2013

ஸ்டுட்கார்ட் பாட்கண்ஸ்டாட் நகர ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருவிழா


ஐரோப்பாவில் இருக்கின்ற ஹிந்து ஆலயங்கள் அனைத்திலும் திருவிழா தொடங்கப்படும் காலம் இது. நான் வாழும் லியோன்பெர்க் நகரின் அருகாமையில் ஸ்டுட்கார்ட் நகர், அதன் சுற்றுப் புறத்தில் 4 கோயில்கள் இருக்கின்றன. கடந்தஆண்டுகளில் ஸ்டுட்கார்ட் சித்தி விநாயகர் கோயில் திருவிழா பற்றிய செய்திகளையும் படங்களையும் வெளியிட்டிருந்தேன். ஸ்டுட்கார்ட் நகரில் மேலும் ஒரு சித்தி விநாயகர் ஆலயம் இருக்கின்றது. இங்கு இதுவரை செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. அந்த வாய்ப்பு  நேர்று மாலை அமைந்தது. எனது இலங்கைத் தமிழ் தோழிகள் இருவர் இக்கோயிலின் அருகாமையில் இருப்பவர்கள். இன்று ஆலயத்தில் திருவிழா தொடக்கம் உள்ளதுஎன்றும் கொடிமரம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றது என்றும் ஒரு வாரத்திற்கு முன்னரே எனக்குத் தகவல் சொல்லியிருந்தமையால் இன்று மூவருமாக சேர்ந்து கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தோம்.

கோயில் வழிபாடும் இறை தரிசனமும் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இந்தியாவிலிருந்து வந்து குருக்களாக சேவை செய்பவரோடு இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மேலும் இரண்டு குருக்கள்களும் இச்சிறப்பு திருவிழாவிற்காக வந்திருக்கின்றனர். அத்துடன் நாதஸ்வர மேளக் கலைஞர்களும் இலங்கையிலிருந்து பிரத்தியேகமாக வந்திருக்கின்றனர்.

கோயிலில் மூலஸ்தானத்தில் பிள்ளையார் சன்னிதி மட்டுமே உள்ளது. தனித்தனியாக அம்மன் சன்னிதி, முருகன் சன்னிதி, ஐயப்பன் சுவாமி சன்னிதி, பைரவர், சண்டீஸ்வரர் சன்னிதி ஆகியவையும் உள்ளன.

கோயிலில் பிரமாண்டமான வடிவில் நர்த்தன விநாயகர் சிலையும் உள்ளது. ஒரு பகுதியில் கோபாலன்  சன்னிதியும் உள்ளது. 

வசந்த மண்டபத்தில் மூகாம்பிகை சித்தி விநாயகர், நல்லூர் சுப்ரமண்ய சுவாமி சிலைகள் அமைந்திருக்கின்றன. வசந்த  மண்டப மூர்த்தங்களின் அலங்காரம் சிகரமாக அமைந்து வந்திருந்த அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டது. 

முதலில்  மூலஸ்தான சுவாமிக்கு பூஜைகள் முடிந்து கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன் பின்னர் வசந்த மண்டப தீபாராதனை முடிந்து மூர்த்தங்களின் ஊர்வலம் ஆரம்பித்தது. ஆலயத்திற்குள்ளேயே இது நடந்தது. 

தேவாரப் பாடல்கள் அதன்பின்னர் இனிய நாதஸ்வர இசை மேள வாத்திய கச்சேரி என தெய்வீக மணம் மனதை நிறைத்தது. மேண்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் என ஒரு அம்மையார் பாடி முடிக்க பூஜை முடிந்து தீபாராதனை நிறைவு பெற்றது. 

வந்திருந்த  அனைவருக்கும் நல்ல இரவு உணவும் ஏற்பாடாகியிருந்தது. சாம்பார் சாதம், மோதகம், வடை, பஞ்சாமிர்தம் என சாப்பிட்டும் மகிழ்ந்தோம். 

ஆலயத் திருவிழா வரும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடைபெறும். ஞாயிற்றுக் கிழமையன்று தேர் திருவிழா காவடி ஆட்டங்களுடன் நடைபெற உள்ளதாக அறிந்தேன். இது மிகச் சிறப்பான நிகழ்வாக நிச்சயமாகஅமையும்.




1986ல் முதலில் ஸ்டுட்கார்ட் நகரில் வைத்து தொடக்கப்பட்ட சிறிய விநாயகர் சிலை. இது ஏறக்குறைய15 செ.மீ அளவு உயரம் கொண்டது.

நர்த்தக விநாயகர் சிலை


ஐயப்பன் சுவாமி சன்னிதி


கொடி மரத்திற்கு பன்னீர் அபிஷேகம்

கொடி மரத்திற்கு தீபாராதனை

கொடி மரத்திற்குப் பால் அபிஷேகம்

கொடி மரத்திற்குத் தயிர் அபிஷேகம்

தீபாராதனை

இனிமையான நாதஸ்வர இசை வழங்கிய கலைஞர்கள்

வசந்த மண்டப பூஜை ஆரம்பம்

சுவாமி ஊர்வலம்

சுவாமி ஊர்வலத்தின் போது மக்கள் வழிபடுகின்றனர்

ஊர்வலம்

யாக சாலை


சுபா 

1 comment:

  1. really nice...i like your articles...i would like to know the german tamilians

    ReplyDelete