இந்த வாரம் திங்கட்கிழமை ஒரு அனுபவம் அமைந்தது.
மூன்ஷனிலிருந்து மட்ரிட்-ஸ்பெயின் செல்லும் விமானத்தில் பயணிகள் அனைவரும் வந்து அமர்ந்து விட இறுதியில் ஒரு கருப்பின தம்பதியர் அப்பெண்ணின் கையில் ஒரு குழந்தை சகிதம் மூவர் வந்து நுழைந்தனர். இவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் ஒரு ஆண் போலீஸ் அதிகாரியும் பெண் போலீஸ் அதிகாரியும் கூடவே வந்தனர். அத்தம்பதியர் கையில் துணிப்பைகள் அதில் பல பொருட்கள் வெளியே தெரியும் வகையில்.
விமானத்தில் அமர்ந்திருந்த ஏனைய பயணிகளின் பார்வை என்னையும் உட்பட இவர்கள் மேல் சில நிமிடங்கள் இருந்தது. பல கேள்விகள் மனதில்.
நிச்சயமாக இவர்கள் தண்டனை பெறச் செல்பவர்கள் இல்லை என்பதை போலீஸார் இவர்களை நடத்திய வகையிலேயே அறிந்து கொள்ள முடிந்தது. கையில் விலங்கில்லை. மரியாதைக் குறையாமல் இருக்கையைக் காட்டி (இறுதி இருக்கை) அதில் அமரச் செய்து ஒவ்வொருவர் பக்கத்திலும் ஒரு போலீஸ் அதிகாரி என அமர்ந்து கொள்ள விமானம் புறப்பட்டது. எனக்கு உறுதியாக மனதில் பட்டது.. இவர்கள் அகதிகள் தான் என்று. அருகாமையில் சிலர் மெதுவாக ஜெர்மானிய மொழியில் பேசிக் கொண்டிருந்ததில் அவர்களும் என் எண்ணம் போலவே அகதிகளாகத்தான் இருக்கும் என்று பேசிக் கொள்வதும் கேட்டது.
ஐரோப்பாவில் மிக அதிகமாக அகதிகள் தஞ்சம் புகுவது வழக்கத்தில் நடந்து வருவது. பொதுவாக ஐரோப்பா முழுமைக்கும் அகதி அந்தஸ்து கோருபவர்கள் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான், ரஷ்யா, பாக்கிஸ்தான், ஈராக், செர்பியா, சோமாலியா, ஈரான், நைஜீரியா, கொசொவோ, வங்காளதேசம், சிரியா, இலங்கை, அர்மேனியா, ஜோர்ஜியா, துருக்கி, துனிசியா, சீனா, என பட்டியலிடலாம்.
பெரும்பாலும் ஜெர்மனிக்கும் ப்ரான்ஸிற்கும் அகதிகளாக வர விரும்புபவர்கள் என்ணிக்கை அதிகம். 2011ம் ஆண்டில் மட்டும் ஜெர்மனிக்கு 50,000 பேருக்கு மேல் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ளனர் என்பதனை இந்த வலைப்பக்கத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். http://epp.eurostat.ec.europa.eu/statistics_explained/index.php/Asylum_statistics மேலும் பல இணைய பக்கங்களும் இது தொடர்பான பல தகவல்களை வழங்கலாம்.
அகதி அந்தஸ்து கோரி வருபவர்களின் நிலை அரசியல் காரணங்களுக்காக என அமைவது சகஜம். பொறுத்தமான காரணம் இருப்பின் அகதி அந்தஸ்து பெற்று இவர்கள் இங்கேயே வாழ்க்கையைத் தொடர்கின்றனர். அப்படி ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த மக்கள் இலங்கைத்தமிழர்கள் உட்பட ஏராளம்.
அரசியல் காரணங்களின் காரணமாக வந்து போர் இல்லாத நிலையில் சிலர் திருப்பி அவர்கள் சொந்த நாட்டிற்கே அனுப்பபடும் சூழ்நிலையை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். என் வீட்டிற்கு அருகாமையில் உள்ள சிண்டல்பிங்கன் நகரில் 2010ம் ஆண்டில் 2 இலங்கைத்தமிழர் குடும்பங்கள் அப்படி குடும்பத்தோடு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் ஏதாவது ஒரு வகையில் இல்லீகலாக ஜெர்மனிக்கு வந்து பின்னர் அகதி அந்தஸ்து கோரி பின்னர் போர் இல்லாத நிலை என அறிய வரும் போது திருப்பி அனுப்பபப்டுகின்றனர். என்னைவிட இலங்கைத்தமிழர் நிலையை நன்கு அறிந்தவர்கள் இது தொடர்பாக தெளிவான தகவல்களைத் தரமுடியும்.
நான் குறிப்பிட்ட இந்த கறுப்பின தம்பதியர் ஏதாவதொரு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஜெர்மனிக்கு வந்தவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினிற்குள் `திருட்டுத்தனமாக` வருவதற்கு சில வழிமுறைகளைக் கையாள்கின்றனர். அந்த வழியில் ஸ்பெயின் வந்து பின்னர் ஜெர்மனிக்கு வந்தவர்களாக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.
பல நாடுகளிலிருந்து அகதி அந்தஸ்து கோரி தஞ்சம் புகுந்த பல்லாயிரம் மக்களுக்கு ஐரொப்பிய நாடுகள் அகதி அந்தஸ்து வழங்கி அவர்கள் வாழ்க்கை இப்புதிய நிலத்தில் தொடர உதவுகின்றன. ஆனால் பல வேளைகளில் பல்வேறு சட்டப்பூர்வ காரணங்களுக்காக சட்ட நடவடிககை எடுக்கப்பட்டு சிலர் திருப்பி அனுப்பவும் படுகின்றனர்.
அகதி அந்தஸ்து கோரி வருகின்ற மக்களின் நிலை .. அவர்களின் வாழ்க்கையின் போராட்டம் என்பவை ஒரு வரியில் சொல்லி விளக்க முடியாதவை. சோதனைகளும் வேதனைகளும் என்னெவென்று தெரியவேண்டுமென்றால் இவர்கள் கதையை அறிந்து கொள்வது உலகை அறிந்து கொள்வதற்கு உதவும். சில உண்மைக் கதைகள் என் நண்பர்கள் வழியாகவே கேள்விப்பட்டிருக்கின்றேன். வாய்ப்பமையும் போது எழுதுகின்றேன்.
சுபா
No comments:
Post a Comment