இளம் வயதில் எங்கள் வீட்டுக்கு அருகில் (பினாங்கில்) சிறிய காட்டுப்பகுதி ஒன்று இருந்தது. அங்கே முந்திரி மரங்களும் புளிய மரங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். நான் எனது பள்ளி நண்பர்களோடு அங்கு விளையாடச் செல்வதுண்டு. எனது நண்பர்களில் சிலர் நன்றாக மரம் ஏறுவார்கள். எனக்கும் ஆசைதான்; ஆனால் முயற்சி செய்து செய்து கீழே விழுவதால் அந்த முயற்சியை சுத்தமாக கைவிட்டு விட்டேன். ஆனால் நண்பர்கள் மரம் ஏறி பழங்கள் பறித்துப் போட அதை ரசித்துச் சாப்பிட்டு மகிழ்ந்தது மிக சுவாரசியாமான ஒரு விஷயம்.
நேற்று எனது நண்பி ஒருவருடன் நான் வசிக்கும் போப்லிங்கன் நகரத்து ஏறிக்கரைக்கு வேலை முடிந்து காற்று வாங்கச் சென்றிருந்தேன். பேசிக்கொண்டே வந்து குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு வந்து அமர்ந்தோம். அவளது குழந்தைகளை விளையாட விட்டு விட்டு பேசிக் கொண்டிருக்கையில் ஒரு 40 வயத்கு மதிக்கத்தக்க குர்டிஸ் இனத்துப் பெண்மணி ஒருத்தி எங்களை கொஞ்சம் பயம் கலந்த பார்வையோடு பார்த்து சிரித்தார். மீண்டும் மீண்டும் அவர் அப்படி மிரட்சியோடு எங்களைப் பார்ப்பதும் பக்கத்தில் இருக்கும் மரங்களைப் பார்ப்பதுமாக இருப்பதைக் கவனித்த எனக்கு ஏதோ ஒன்று அங்கு நடக்கின்றது என்று தோன்றியது. உற்று கவனிக்க, அங்கிருக்கும் ப்ளம்ஸ் மரத்தின் மேல் யாரோ ஒருவர் ஏறி பழங்கள் பறித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மரத்தைக் குலுக்க குலுக்க நிறைய ப்ளம்ஸ் பழங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுவதைக் காண முடிந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படிப்பட்ட ஒரு காட்சி. அதுவும் ஜெர்மனி வந்து சேர்ந்த இந்த நான்கு ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க முடிந்தது.
ஒரு பொது இடத்தில் இருக்கின்ற பழ மரங்களிலிருந்து ஜெர்மானிய மக்கள் பழங்களைப் பறித்து இதுவரை நான் பார்த்ததில்லை. மரங்களில் உள்ள அப்பழங்கள் அப்படியே வீணாகித் தரைம் போது மரத்தின் மேல் இருந்த அந்தச் சிறுவன் கீழிறங்குவது தெரிந்தது. நன்றாக பார்த்தால் அது ஒரு பெண். அதுவும் 30 அல்லது 35 வயது மதிக்கத்தக்க பெண். இதைப் பார்த்த எனக்கு ஒரே ஆச்சரியம். எவ்வளவு தைரியமாக ஒரு பொது இடத்தில், மரத்தில் ஏறி இவள் பழம் பறித்துப் போடுகின்றாளே என்று! கீழே இறங்கிய உடனே இரண்டு பெண்மனிகளுமாகச் சேர்ந்து எல்லா பழங்களையும் ஒரு துணிப்பைக்குள் அவசர அவசரமாக எடுத்து திணிக்க ஆரம்பித்து விட்டனர்.
உடனே எனது தோழியிடம் இதைப்பற்றி கேட்க அவள் இது அவ்வப்போது சகஜமாக இங்கு நடக்கும் விஷயம் தான் என்றாள். மேலும், இந்த இடம் பொது மக்களுக்காக உள்ள ஒன்று என்றாலும் மாலை ஆறு மணிக்கு மேல் இங்கு ஜெர்மானியர்கள் வருவதில்லை. அவர்கள் பொதுவாக மதிய வேளைகளில் தான் இங்கு வருவர். 6 மணிக்கு மேல் இங்கு அதிகமாக துருக்கிய இனத்தவரும் குர்டிஸ் இனத்தவரும் தான் நிறைந்திருப்பர். அதனால் இவர்களுக்க்கு அவ்வளவாக பயம் இருப்பதில்லை என்றாள். இதுவும் ஒரு ஆச்சரியமான ஒரு தகவலாகவே எனக்குப் பட்டது. பொதுவாக ஜெர்மனியில் பார்க்கும் போது இனவேறுபாடு என்ற ஒன்று இருப்பதைக் காண முடிவதில்லை. ஆனாலும் மறைமுகமாக பல இடங்களின் மக்களின் தனித்துவம் வேறுபட்டு வெளிப்படுவதைக் காணத்தான் முடிகின்றது.
No comments:
Post a Comment