ஜெர்மனியில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில். இரவு பத்து மணி வரை சூரியன் மறைவதில்லை. பகல் நீண்ட நேரமாக இருப்பதால் நிறைய காரியங்கள் செய்ய முடிகின்றது. குளிர்காலத்தில் மதியம் 5 மணிக்கெல்லாம் சூரியன் மறைந்து விடுவதைப் பார்த்து புலம்பிக் கொண்டிருந்த எனக்கு இப்போது பெரிய மகிழ்ச்சி. ஆனாலும் வெயிலின் கடுமையும் பாதிக்கத்தான் செய்கின்றது. காலை 5 மணிக்கெல்லாம் விடிந்து விடுகின்றது.
ஜெர்மானியர்கள் பொதுவாக இந்த நேரத்தில்தான் விடுமுறையைத் திட்டமிடுகின்றனர். வடக்குப் பகுதியைத்தவிர மற்ற பகுதிகளில் கடற்கரை இல்லாததால் பெரும்பாலும் ப்ரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்று விடுமுறையைக் கழிப்பது பழகிப்போன விஷயம். அதிலும் இந்த வருடம் வெயில் மிகக் கடுமையாக இருப்பதால் பலரும் இத்தாலியக் கடற்கரைகளை முற்றுகையிட்டுவிட்டனர்.
இந்த செய்தி அறிந்த இத்தாலிய அமைச்சர் ஒருவர் ஜெர்மானியர்கள் படையெடுத்து தங்கள் கடற்கறையை சூழ்ந்து கொள்வது பார்க்க மிக மோசமாக இருக்கின்றது என்று பத்திரிக்கையில் வர்ணிக்க, தனது விடுமுறையை இத்தாலியில் கழிக்க திட்டமிட்டிருந்த ஜெர்மானிய சான்சலர் ஷ்ரூடர் (அதிபர்) பயணத்தை ரத்து செய்து விட்டார். அந்த அமைச்சர் மன்னிப்புக் கேட்காத வரை தான் விடுமுறைக்காக இத்தாலி செல்லப்போவதில்லை என்று உறுதியெடுத்து ஜெர்மனியிலேயே இப்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார் என்றும் தகவல். ஆனால் முறையற்று பேசிய அந்த இத்தாலிய அமைச்சர் தான் எந்த தவறும் செய்யவில்லை; ஆகவே மன்னிப்புக் கேட்க முடியாது என்று கூறி விட்டார்.
ஆனால் இதையெல்லாம் பற்றி மக்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இத்தாலியர்களைக் கேட்டால், ஜெர்மானியர்கள் வருவது தங்களுக்கு பெரிய வருவாயைத் தருகின்றது என்று கூறுகின்றனர். ஜெர்மானியர்களும் வருந்தியதாகத் தெரியவில்லை. ஓய்வைக் கழிப்பதிலேயே முழுமனதோடு ஈடுபட்டு சந்தோஷித்திருக்கின்றனர். அவரவர்களுக்கு அவரவர் வேலை...
No comments:
Post a Comment