BREXIT .. தொடர்ச்சி
இன்னும் ஏறக்குறைய 100 நாட்களே உள்ளன. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமா? எத்தகைய உடன்பாடுகளை இரண்டும் ஏற்றுக் கொள்ளும்? எத்தகைய பின் விளைவுகள் உடன் ஏற்படப் போகின்றன? ஐரோப்பாவின் மிக முக்கிய கேள்விகளாக இன்று இவை இருக்கின்றன.
கடந்த இரு நூற்றாண்டுகள் உலகை ஆண்டோம் என பெருமை பேசிக்கொண்டு அந்த பெருமையை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதன் வழி இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பெருமை பேசி தனித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள பிரிட்டன் செய்யும் இந்தக் காரியத்தை தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்ளும் முயற்சிக்கு ஒப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டியிருக்கின்றது.
இன்றைய நாள் வரை பிரிட்டனில் வேலை பார்க்கும் ஐரோப்பியர்களின் நிலையைப் பற்றியும் ஐரோப்பாவில் வேலை பார்க்கும் பிரிட்டன் பிரஜைகளைப் பற்றியும் சரியான வழிகாட்டுதல் இல்லை. ஸ்பெயின், பிரான்சு கடற்கரை பகுதிகளில் வாழும் ஆயிரக்கனக்கான பிரித்தானிய பென்ஷன் எடுத்துக் கொண்டு தங்கள் முதுமையைக் கழிக்கும் மக்களைப் பற்றி தெளிவான வழிமுறைகள் வெளியிடப்படவில்லை. அயர்லாந்து வட அயர்லாந்து எல்லை, வர்த்தகம், பொருளாதார விசயங்கள் தெளிவாக்கப்படவில்லை.
இப்போதைய நிலையைப் பார்க்கும் போது No deal நிலையில்தான் பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து பிரியுமோ .. அல்லது மக்கள் எழுச்சி ஏற்பட்டு #BREXIT வேண்டாம் என்று இறுதி நேரத்தில் முடிவெடுப்பார்களோ என குழப்பமே அதிகரிக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர், பிரிட்டன் இன்றும் கூட நிலைமையை சரி செய்யாமல் பிரிந்து செல்வதினால் தாங்கள் பெருமை அடைவதாக நினைத்துக் கொண்டே செயல்படுவதாக குற்றம் சாற்றுகின்றார்.
ஆண்ட பரம்பரை பெருமை பேசியே பிரிட்டன் தம் மக்களை பிரச்சனைக்குள் தள்ளாமல் இருந்தால் சரி!
-சுபா