Sunday, April 1, 2012

மாண்டல் (பாதாம்) பூக்கள் திருவிழா

திருவிழாக்களில் தான் எத்தனை வகை?

சென்ற வாரம்  சிற்றூரானா கிம்மல்டிங்கன் நகரில் நடக்கும் ஒரு சாலைத் திருவிழாவிற்குச் செல்வோம் என புறப்பட்டோம். பொதுவாக ஒரு ஸ்ட்ரீட் பார்ட்டி என்றால் அந்த ஊரின் பெயரோடு இணைந்து திருவிழாவின் பெயர் அழைக்கப்படும் இந்த சாலைத் திருவிழாவைச் சற்று வித்தியாசமாக டோய்ச் மொழியில் Gimmeldingen Mandelblütenfest என்று அழைக்கின்றனர். மாண்டல் என்று டோய்ச் மொழியில் குறிப்பிடப்படுவது பாதாம் பருப்பு.


மாண்டல் மலர்கள்

பாதாம் மரங்கள் ரைன் நதிக் கரையை ஒட்டிய அழகிய நகரமான நோய்ஸ்டாட் வைன் ஸ்ட்ராஸ பகுதியின் அருகில் இருக்கும் ஒரு சிற்றூர் தான் கிம்மல்டிங்கன். சற்று மலைப்பாங்கான நகரம். ஜெர்மனியின் மிக முக்கிய வைன் தயாரிப்பு நகரங்களில் ஒன்று நோய்ஸ்டாட். ஜெர்மனிக்குச் சுற்றிப் பார்க்க வருபவர்கள் இந்தத் திராட்சை தோட்டங்களைப் பார்த்து மனதைப் பறிகொடுப்பர் என்பது உண்மை. கொள்ளை அழகைத் தாங்கி நிற்கும் இந்தச் சற்று மலைப்பாங்கான பகுதியின் அருகில் தான் கிம்மல்டிங்கன் நகரம் உள்ளது.




ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா இது. பாதாம் மரங்கள் இளம் சிவப்பு மலர்களைத் தாங்கி நிற்கும் அழகே அழகு. இவற்றைப் பார்த்துக் கொண்டே மலைகளில் ஏறிச் சென்று திருவிழாவில் விற்கப்படும் பொருட்களைப் பார்த்துக் கொண்டும் உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிடுவதும் மனதைக் கவரும் அம்சங்கள். இவ்வகை சாலை திருவிழாக்களை ரசிக்கக் காத்திருக்கும் ஜெர்மானியர்களுக்கு ஜெர்மன் பியர்களை ருசிப்பதற்கும் கரி உர்ஸ்ட், சாப்பிடுவதற்கும் நண்பர்களோடு பேசி மகிழ்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு.



விக்கிபீடியாவில் உள்ள செய்தியின்படி இந்த கிம்மல்டிங்கன் பாதாம் திருவிழா 1934ல் தான் முதன் முதலாகத் தொடங்கப்பட்டதாம். இடையில் இரண்டாம் உலகப்போரின் காரணமாக சில ஆண்டுகள் இத்திருவிழா தடைபட்டாலும் மீண்டும் இவ்விழா தொடர்ந்து நடைபெற ஆரம்பித்து இப்போது ஆண்டுத் திருவிழாவாக அமைந்துள்ளது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத்திருவிழா சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இங்குள்ள ப்ரோட்டஸ்டெண்ட் தேவாலாயத்தில் தொடங்கப்படும். சனிக்கிழமை முடிந்து பின்னர் ஞாயிற்றுக் கிழமை மாலை வரை கடைகள் போடப்பட்டு விற்பனைகள நடைபெறுவதோடு இசை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறும்.


வலது புறத்தில் தேவாலயம்

மரங்களையும் பூக்களையும் ரசித்ததோடு நான் spinatknoedel என்ற ஒரு வகை உணவை வாங்கி ருசிபார்த்தேன். இது கீரையை உடைந்த ரொட்டியுடன் சேர்த்து உருண்டையாக்கி தயாரிக்கபப்ட ஒரு வகை உணவு. அத்துடன் காரட் இஞ்சி கலந்த ஒரு சூப்பும் சாப்பிட்டேன். வித்தியாசமான சுவையில் அமைந்த உணவு வகை. அதற்குப் பின்னர் டம்ப்நூடல் எனப்படும் ஒரு வகை இனிப்புப் பலகாரத்தையும் வாங்கி அனைவரும் சுவைத்தோம். இது பார்ப்பதற்கு இட்லி போல இருக்கும். இதனை வனிலா சாஸுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம் அல்லது வைன் சாஸுடன் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.


டம்ப்நூடல்



நாட்டியமாடும் தோரணையில் ஒரு மாண்டல் மரம்


அழகான மதியம், அருமையான உணவு, உள்ளதைக் கொள்ளைக் கொழில் இயற்கைச் சூழல் - இவற்றை ரசித்து மாலையில் வீடு திரும்பினேன்.


சுபா



மாண்டல் பூக்களைப் போன்ற இனிப்புக்கள்






சுபா

No comments:

Post a Comment