கிறிஸ்மஸ் மார்க்கெட் ஸ்டுட்கார்ட் அதன் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள பல சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் தினமும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இந்தச் சுற்று வட்டாரத்தில் புகழ்பெற்ற ஒரு கிற்ஸ்மஸ் மார்க்கெட் என்று சொன்னால் அது எஸ்லிங்கன் நகரத்தின் Mittelaltermarkt (Medieval Market) ஐ த்தான் சொல்ல வேண்டும்.
எல்லோருக்கும் பழக்கமான தற்கால கிறிஸ்மஸ் மார்க்கெட் முன் புறம் அமைந்திருக்க அதனைச் தாண்டி சற்று உள்ளே நுழைந்தால் வருபவர்களை வரவேற்கும் இந்தப் பழங்கால மக்களின் சந்தை. இதில் என்ன சிறப்பு என்றால் இந்தப் பகுதியில் கடைகள் அமைத்திருப்போர் அனைவருமே பழங்கால மக்களின் ஆடைகளில் வீரகள் போலவும், படை வீரர்கள் போலவும் கிராமத்து பெண்கள் போலவும் உடை அணிந்து கடைகளில் விற்பனையில் ஈடுபட்டிருப்பதும் சுற்றிலும் உலாவருவதும் தான். இடைக்கிடையே பழங்கால மக்களின் உடைகளில் ஊர்வலமும் நடைபெறும்.
இந்த ஆண்டும் இங்கே சென்று வர மறக்கவில்லை. கிறிஸ்மஸ் மார்க்கெட் என்றலே என்னைக் கவர்வது எஸ்லிங்கன் கிறிஸ்மஸ் மார்க்கெட் தான்.
இங்கே கண்களுக்கும் விருந்து கிடைக்கும்; வயிற்றுக்கும் விருந்து கிடைக்கும். சூடான ரொட்டி, சீஸ் வெங்காயம் கலந்த Flamkuchen, இனிப்பு வகைகள், க்ளூ வைன் ஆகியவை எண்ணைக் கவர்ந்த உணவு வகைகள். உணவை ருசித்துக் கொண்டே சந்தையைச் சுற்றிப் பார்ப்பதும் ஒரு சுவையான அனுபவம் தானே.
சரி .. இந்த எஸ்லிங்கன் கிறிஸ்மஸ் மார்க்கெட்டில் எடுத்த சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாருங்கள்.. பார்த்து ரசிப்போம்!
உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் எஸ்லிங்கன் நகரத்தின் எழில்!
கிறிஸ்மஸ் சந்தைக்குள் செல்வோமா ?
ஆ.. என்ன இது காட்டுப் பன்றிகள் கூறையின் மேலே.. ??
ஆஹா.. இவை இறைச்சி வகை உணவுகள் விற்கப்படும் கடையல்லவா.? வாருங்கள் வாருங்கள் என இறைச்சிப் பொருட்களை விரும்பும் வாடிக்கையாளர்களை அழைக்கும் காட்டுப் பன்றிகள்.
Mittelaltermarkt (பழங்கால மக்களின் சந்தை)க்குள் சென்று இங்கு என்ன இருக்கின்றது என பார்ப்போமா ?
ஆஹா.. நீண்ட குச்சியில் சுற்றப்பட்ட கோதுமை மாவு ரொட்டிகள். விட்டு வைப்பேனா.. நான் ஒன்றை வாங்கி சுவைத்தேன். மெண்மையான ரொட்டி.. தக்காளி கலந்து தயாரிக்கிறார்கள். சுவை.. அபாரம்.
ரொட்டி தயாரிப்பு முறை.. சமையல் கலையில் ஆர்வமுள்ளோர் பார்த்துக் கொள்ளுங்கள்.
என்ன அது.. தலைகளாகத் தொங்குகின்றனவே.. தவறு செய்பவர்களின் தலைகளை இப்படித்தான் வெட்டி காயவைத்து தொங்க வைப்பார்களா.. கொடுமையாக இருக்கின்றதே..!
மிருகங்களின் தோல் ஏனைய பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட பொருட்கள். முன்னர் ஆதிவாசிகளுக்கு மிருகங்களின் தோல், மயிர், கொம்புகள் பற்கள் ஆகியவை எவ்வளவு முக்கியமானவையாக இருந்திருக்கின்றன..!
ஆஹா.. இங்கே Flammkuchen கிடைக்கும். வாருங்களேன் வாங்கிச் சாப்பிடலாம்.
என்ன கணமான இரும்புச் சங்கிலி கவசம்.. இதை போட்டுக் கொண்டு ஆதிவாசி மக்களின் உடையில் க்ளூ வைன் அருந்துகிறார் இந்த இளைஞர்.
இங்கே க்ளூ வைன் கிடைக்கும். பட்டை தூள், சீனி கலந்த வைன் கொதித்துக் கொண்டிருக்கின்றது.
இதோ ஆரம்பித்து விட்டது அணிவகுப்பு..இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டு வருகின்றனர் இந்த வீரர்கள்.
இவரைப் பார்த்தாலே குழந்தைகள் பயந்து விடுவார்களே..!
இவள் யார் ..மோகினியா..அல்லது பயங்கரப் பேயா..??
ஜெர்மானியர்களைக் கவர்ந்த ப்ராட் வுர்ஸ்ட். மிகுந்த ஈடுபாட்டுடன் சமையல்காரர்கள் இவற்றைத் தயாரிக்கிறார்கள்.
முன்னரெல்லாம் எங்கே கேக் பிஸ்கட் வகைகள் கிடைக்கும்? பழங்களிலும் காய்கள் விதைகளில் தானே இனிப்பு வகைகளையும் தயாரித்து வைப்பார்கள். அந்த அனுபவத்தை இங்கே பெறலாம்.
இங்கே லெபனான் வகை ஃபலாஃபல் இந்திய பெயருடனும் ஒரு புதிய வகையில் கலக்கலாய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்தார்கள். இதனை விட்டு வைப்போமா..? மாங்காய் சட்னி சாஸ், தயிர் கலந்து ஒன்றினை வாங்கிச் சாப்பிட்டோம். சுவை கொஞ்சம் பரவாயில்லை. கூடாரம் இருக்கும் அழகு போல உணவு அவ்வளவு சுவை இல்லை.
இரவின் இருட்டில் மங்கலான வெளிச்சத்தில் கூடாரங்களின் அழகு!
மெழுகுவர்த்தியில் எத்தனையோ வகை உண்டு. சிவபெருமான் உருவத்திலும் ஒரு மெழுகு வர்ததி நடுவே!
இங்கே பழங்கால வகை குளியல் எடுக்கலாம். காவலுக்கு ஒருவர் வாசலில் அமர்ந்திருக்கின்றார். வாசமான மூலிகைகள் கலந்து சூடான வெந்நீர் கொதித்துக் கொண்டிருக்கின்றது. இந்தக் குளிருக்கு சூடான குளியல் இதம் தானே!
காட்டுக்குள் வாழ்வதென்றால் வில் ஏந்தி அம்பு விடவும் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்கிறாரே இந்த மனிதர்?
இங்கே கவசங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சண்டையிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமா.. வாங்கிக் கொள்ளுங்கள்.
இரவின் ஒளியில் கூடாரங்கள்..!
மேஜிக் ப்ரூம் இங்கே வாங்கிக் கொள்ளலாம்.
கோஸ்பல் குழுவினர்.. சந்தையில் இசை விருந்து வைக்கின்றனர்.
அருமையான விளக்கம் , அழகான படங்கள்
ReplyDelete