அன்று சொன்ன அந்த ரெசிப்பியைச் சமைத்த போது படம் பிடித்து வைத்திருந்தாலும் பகிர்ந்து கொள்ள நேரம் அமையவில்லை. இன்று படங்களுடன் செய்முறையையும் விவரிக்கிறேன்.
Kartoffelknödeln /Kartoffelkloße உருளைக் கிழங்கு உருண்டைகளும் காளான் சாஸும்
வேகைவைத்த உருளைக்கிழங்கை மிகச் சிறிதாக நறுக்கி அவற்றை கொஞ்சம் மாவு, உப்பு சேர்த்து பிசைந்து வட்டமாக உருட்டி வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு உருண்டைகள் Kartoffelknödeln கார்ட்டோஃபெல் க்னோடல் என அழைக்கப்படுகின்றன. இதனை சுயமாகத் தயாரிக்கலாம். அல்லது கடையில் இது தயாரிக்கப்ப்ட்டு ரெடி மேடாக கிடைக்கும். அதனையும் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தி இந்த உணவைத் தயாரிக்கலாம்.
நான் கடையில் கிடைக்கும் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் உருளைக்கிழங்கு உருணடைகளை இந்தச் சமையலுக்குப் பயன்படுத்தியிருக்கிறேன்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு உருண்டைகள் - ஒரு பாக்கேட்டில் 6 உருண்டைகள் இருக்கும். இது இருவருக்கு போதுமான அளவு.
- தயாராக இருக்கும் ஏதாவது ஒரு சாஸ் கலவை - இது காளான் சாஸ் அல்லது ப்ரொக்காலி சாஸ். பெரும்பாலும் காளான் சாஸ் மிகப் பொறுத்தமாக இருக்கும்.
- சிறிய செர்ரி தக்காளிகள்
- உப்பு - தேவையான அளவு
- மிளகுத் தூள் - தேவையான அளவு
இந்த சமையல் செய்வதற்கு 20 நிமிடங்கள் போதுமானது.
ஒரு பாத்திரத்தில் நிறைய நீர் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதில் மெல்லிய துணியால் சுற்றப்பட்டிருக்கும் உருளைக்கிழங்கு உருண்டைகளைப் போடவும். பத்து நிமிடங்கள் நன்றாக இந்தக் கிழங்கு உருணடைகள் வெந்ததும் மேலே வந்து விடும். அவற்றை மெதுவாக எடுத்து குளிர்ந்த தண்ணீரில் ஒரு முறை நனைத்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இப்போது உருளைக்கிழங்கு உருணடைகளை மூடியிருக்கும் மெல்லிய துணியை நீக்கி விடவும்.
உருளைக் கிழங்கு கொதித்துக் கொண்டிருக்கும் போதே சாஸ் தயாரிக்க ஆரம்பிக்கலாம். சாஸ் கலைவையை 500 மி.லிட்டர் தண்ணீர் சேர்த்து அதனை நன்றாக கலக்கி மிதமான சூட்டில் வைத்து கிளறவும். 5 நிமிடங்கள் இவ்வாறு கிளறியவுடன் சாஸ் கலவை தயாராகி விடும்.
இப்போது ஒரு தட்டில் உருளைக்கிழங்கு உருண்டைகளை வைத்து அதன் மேல் சாஸ் தேவையான அளவு சேர்க்கவும். சுவையைக் கூட்ட செர்ரி தக்காளிகளைச் சேர்த்து கொஞ்சம் மிளகுத் தூளைத் தூவி அலங்கரித்து சாப்பிடவும்.
இது தெற்கு ஜெர்மனியில் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று.
No comments:
Post a Comment