Saturday, March 5, 2005

மாரியாத்தா..!

அலுவலகத்தில் நேற்று ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்ததது. அவளது பெயர் மாரியாத்தா. தமிழ் பெயராக இருக்கிறதே தமிழ் பெண்ணோ என்று நினைத்து விட வேண்டாம். மேற்கத்திய பெண்தான் இவள். இவள் பெயர் என்னை இவளைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ளவேண்டும் என்று தூண்டியது. சும்மா இருக்காமல், அவளிடமே விசாரிக்க ஆரம்பித்து விட்டேன்.

அவள் ரோமானியப் பெண். ரோமானிய நாட்டிலிருந்து வந்து இப்போது இங்கு எனது அலுவலகத்திலேயே ஒரு பிரிவில் வேலை செய்து கொண்டிருக்கின்றாள். அவள் பெயர் தமிழ் பெயர் போலவே இருக்கின்றது என்று சொன்னேன். அவளுக்கும் ஆச்சரியம். எழுதும் போது Mariatta என்று எழுதுகிறாள். உச்சரிக்கும் போது 'மரியட்டா' என்றில்லாமல் "மாரியாத்தா'' என்று தான் உச்சரிக்க வேண்டுமாம்.

தமிழில் மாரியம்மா, மாரி, மாரியாத்தா என்றெல்லாம் இந்தப் பெயர் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதே போல மலாய் இனத்திலும், மரியம், மரியா என்றும் ஆங்கிலத்தில் மேரி என்றும் ஜெர்மானிய பெண்களிடையே மரிலூயிஸா, மரியானா, மரியா என்றும் இருக்கின்றது. ஆனால் ரோமானிய மொழியிலும் இதே பெயர் தமிழ் பெயர் போலவே இருப்பதைக் கேட்க ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

தமிழ் மொழியைப் பொறுத்தவரை இப்போதெல்லாம் இந்தப் பெயர் பிரபலமான ஒன்றல்ல. மாரியாத்தா என்றவுடனேயே நமது மனகண்ணில் மாரியம்மன் தான் தோன்றுவாள். மலேசியாவில் ரப்பர் மரத்தோட்டங்களிலும் செம்பனை மரத்தோட்டங்கள் உள்ள இடங்களிலும் சிறிய சிறிய கோயில்கள் (மரத்தடி கோயில்கள்) ஏராளம் இருக்கும். பெரும்பாலும் வீரபத்திரன், மாரியம்மன் தான் வழிபடு தெய்வங்கள். அதிலும் மாரியம்மன் கோயிலென்றால் அதற்கு வருவோரும் அதிகம். திருவிழாக்களின் போது ஆட்டை பலிகொடுத்து பெரிய அளவில் விருந்து சமைத்து கிராமத்தில் இருக்கும் தமிழர்களெல்லாம் ஒன்று கூடி விழா கொண்டாடும் நிலை இன்னமும் மலேசிய கிராமங்களில் உள்ளது. கிராமங்களில் சில இடங்களில் இந்த தெய்வத்தை நினைத்து, தங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு ஒரு சிலர் மாரியம்மா என்ற பெயரை வைக்கின்றனர். ஆனால் இது குறைந்து கொண்டுதான் வருகின்றது. ஜெர்மனியைப் பொறுத்தவரை நிலமை அப்படியல்ல. மரியா, மரியானா என்பவை ஜெர்மானியர்களிடையே இப்போதும் பிரபலமான பெண்களுக்கான பெயர்கள் தான்.

அலுவலகத்தில் மாரியாத்தாவை பார்க்கும் போதெல்லாம் மாரியம்மனை நினைக்காமல் இருக்கமுடியுமா?

1 comment:

  1. சுபா! இதைப்படித்ததும் "தில்லானா மோகனாம்பாள்" பாலையாதான் நினைவிற்கு வருகிறார் :-) மேரி என்ற பெயருடைய நர்ஸிடம் இவர் "அம்மா! மாரியம்மா! இந்தக் கடுகு இருக்கில்ல, கடுகு. அந்தத்தண்டி பேசிக்கிறேன்" என்பார் :-)) இவளை மேரியட்டா என்று சொல்லக்கூடாதோ? "மாரியாத்தா" என்றுதான் அழைக்க வேண்டுமோ! வேடிக்கைதான் :-))

    ReplyDelete