Tuesday, January 6, 2004

Turkey & EU



ஜெர்மனியில் ஜெர்மானியர்களுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய எண்ணிக்கையில் இருப்பவர்கள் துருக்கியர்கள்தான். இந்த நாட்டில் எந்த மூலையிலும் Doner Kebab கடைகள் இருக்கும். துருக்கியை அடுத்து ஜெர்மனிதான் அவர்களுக்கு அடுத்த தாய்நாடு என்று சொல்லுமளவுக்கு இங்கு துருக்கியர்கள் வாழ்கின்றார்கள். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னர் உடல் உழைப்பு வேலைகளுக்காக இங்கு அழைத்து வரப்பட்ட துருக்கியர்கள் படிப்படியாக இங்கேயே தங்கி குடியுரிமையும் பெற்றுக்கொண்டு வாழ்கின்றனர். பெரும்பாலும் உணவுக்கடைகள், அங்காடிக் கடைகள், துணிக்கடைகள், உடல் உழைப்புத் துறைகள் என்று இருந்தவர்கள் இப்போது பலவாறாக அனைத்து தொழில்துறையிலும்
இறங்கிவிட்டனர். ஆனாலும் கணினித்துறையைப் பொருத்தவரை எனது அனுபவத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய தொகையில் தான் துருக்கியர்கள் நுழைத்திருக்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இன்னமும் சேரவில்லை. துருக்கி இணைவதைப் பற்றி பலவாறான கருத்துக்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. குறிப்பாக சைப்ரஸ் நாட்டில் நடந்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் துருக்கியும் ஒரு காரணமாக இருப்பது ஒரு தவறான மதிப்பையே இதுவரை துருக்கிக்கு வழங்கி வந்தது. இருப்பினும் இந்த நிலையில் மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியங்கள் இப்போது படிப்படியாக தெரிய ஆரம்பிக்கின்றன. ஜெர்மனிக்குத் தற்சமயம் வருகை புரிந்திருக்கும் துருக்கிய அதிபர் Recep Tayyip Erdogan அதற்கான வழிகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்.

துருக்கிய நாட்டினருக்குப் பல தரப்பட்ட வகைகளில் ஜெர்மனியிலிருந்து உதவிகள், தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்த ஆண்டு தென்கொரியாவில் நடந்த சாக்கர் விளையாட்டில் துருக்கிய நாட்டைப் பிரதிநிதித்து விளையாடிய விளையாட்டாளர்களில் சிலர் ஜெர்மனியில் பயிற்சி பெற்றவர்கள் தாம். இஸ்தான்புல், அன்கரா, அண்டாலியா போன்ற முக்கிய நகரங்களில் ஜெர்மானிய சுற்றுப்பயணிகளை நம்பியே பல சுற்றுலா நிறுவனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. துருக்கியின் மிக உயர்ந்த செல்வமாகக் கருதப்படும் கம்பளங்களும் மிக அதிகமாக ஜெர்மனியில் விற்கப்படுகின்றன. இப்படிப் பல தரப்பட்ட வகையில் இருதரப்பட்ட நாடுகளுக்கான தொடர்புகள் இருந்து வருகின்றன.

70 மில்லியன் மக்கள் வாழும் துருக்கியிலும் இப்போது பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதன் வழி வெளி நாடுகளுக்கு, அதிலும் குறிப்பாக ஜெர்மனிக்கு வேலைத்தேடிச் செல்லக் கூடிய வாய்ப்பு மேலும் சிறப்பாக அமையும் என இவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார வல்லரசாக இருந்த ஜெர்மனியிலேயே 3 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் இருக்கும் இந்த நிலையில் இது ஒரு கனவாக மட்டுமே இருக்க முடியும் என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது.

No comments:

Post a Comment