Monday, March 16, 2020

கொரோனா - இன்றைய நிலை

ஜெர்மனி நேற்று இரவு 8 மணிக்கு அதன் எல்லையை மூடும் அறிவிப்பை வெளியிட்டது. இதன் அடிப்படையில் எல்லை நாடுகளான பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய ஐந்து நாடுகளுக்கான எல்லைகள் நேற்று இரவிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்து மூடப்பட்டுள்ளன. ஆயினும், வர்த்தகம் தொடர்பில் இந்த நாடுகளிலிருந்து வருகின்ற பெரிய வாகனங்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட நாட்டில் இருந்துகொண்டு ஜெர்மனியில் பணியாற்றும் நபர்கள் ஆகியோருக்குத் தனி சலுகையாக வழிகள் திறக்கப்படும் என்றும் ஜெர்மனி கூறியுள்ளது.

வார இறுதி கடுமையான பீதியுடன் இங்கு தொடங்கினாலும் படிப்படியாக மக்களின் கட்டுப்பாடு நிறைந்த செயல்பாடுகளினால் அமைதி ஏற்பட்டிருக்கின்றது. என்னைப் போன்று வீட்டிலிருந்து பணியாற்றும் பலருக்கும் கொரோனா பிரச்சனை தீரும்வரை வீட்டிலிருந்து பணியாற்ற அலுவலகங்கள் வாய்ப்பினை வழங்கி இருக்கின்றன. சாலைகளில் அதிக வாகனங்கள் இல்லை, பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. பேருந்துகள் செல்கின்றன. ஆயினும் மிகக் குறைவான பயணிகளுடன்.

ஐரோப்பாவில் வசந்த காலம் தொடங்குவதால் வெயில் அதிகரித்தல் என்பது கூடுதலாக நன்மை தரும். அதோடு ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டிருக்கும் அவசரநிலை கட்டுப்பாடுகள் மக்களிடையே நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் என்பதாலும் ஓரளவு இம்மாத இறுதிக்குள் நிலைமை ஐரோப்பாவை பொறுத்தவரை பாதிப்பிலிருந்து குறைந்துவிடும் என்று கருத தூண்டுகிறது.

இன்றைய நிலையில் ஐரோப்பாவில் இத்தாலி, இங்கிலாந்து பிரான்சு ஆகிய மூன்று நாடுகள் பாதிப்பினை அதிகம் சந்தித்த நாடுகளாக உள்ளன.

வாட்டிக்கன் வழிபாட்டிற்கு மக்கள் வருவதை தடுத்துள்ளது. புனித வெள்ளி தொடர்பான வழிபாடுகள் அனைத்தையும் போப் அவர்களே தனியாக நிறைவேற்றுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசுகள் ஏற்படுத்தும் கட்டுப்பாடுகள் ஒருவகையில் மனிதர்களாகிய நமக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் கூட, இத்தகைய காலகட்டங்களில் நம் ஒவ்வொருவரது உடல்நிலையைக் கவனத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை நாம் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

நமது தமிழ் உணவில் பயன்பாட்டில் உள்ள எலுமிச்சை பழம், தேன், கொய்யா, பூண்டு, இஞ்சி, வெங்காயம், நிலவேம்பு, மஞ்சள் போன்ற மூலிகைகள் நிச்சயம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

எனது ஜெர்மானிய நண்பர்கள் பலருக்கும் பூண்டு இஞ்சி வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றையும் எலுமிச்சம் பழத்தையும் தினமும் சாப்பிட சொல்லி இருக்கின்றேன். இங்கே ஜெர்மானியர் பலருக்கும் பூண்டை கண்டால் ஒரு அலர்ஜி இருக்கும்.. ஆயினும் இத்தகைய வேளையில் கண்டிப்பாக பூண்டு இஞ்சி வெங்காயம் ஆகியவை உணவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை என் ஜெர்மானிய நண்பர்களுக்கு வலியுறுத்திச் சொல்லி இருக்கின்றேன். என் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் சொல்லி இருக்கின்றேன்.

மருத்துவ ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதால் இந்த வார இறுதிக்குள் உலகளாவிய நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. -சுபா

Friday, March 13, 2020

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் ஐரோப்பாவில் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டிருப்பதாகவே ஊடகத் தகவல்களும் உலக சுகாதர மையத்தின் அறிவிப்பும் உள்ளன.

டென்மார்க்கும் போலந்தும் எல்லைகளை மூடும் நடவடிக்கையை இன்று அறிவித்து விட்டன. நேற்று தொலைக்காட்சி அறிவிப்பில் இத்தாலியிலிருந்து சுலோவேனியா செல்வதற்கான எல்லைகள் அடைக்கப்பட்டிருப்பதைக் காட்டினர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சுலோவேனியா எல்லையைத் தடுத்து வைத்துள்ளது. இத்தாலியிலிருந்து சுவிசர்லாந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் எல்லையில் சோதனை செய்த பின்னரே அனுப்புவதையும் தொலைகாட்சி செய்தி காட்டியது.

பெல்ஜியம் நாட்டில் அனைவரும் வீட்டிலிருந்து பணியாற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். வருகின்ற திங்கட்கிழமை பள்ளிகள், உணவு விடுதிகள், கடைகள் அனைத்தையும் மூடும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ பேச்சாளர் தொலைகாட்சிக்குப் பேட்டியளித்தார்.

இத்தாலியில் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் தடைசெய்யபப்ட்டுள்ளன.

அமெரிக்காவில் ட்ரம்ப் அறிவித்துள்ள இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க நேரம் நள்ளிரவு முதல், 26 ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவில் நுழைவதற்கான தடை அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஜெர்மனி உட்பட ஐரோப்பாவில் தங்கி பணியாற்றிவரும் அமெரிக்கர்கள் இப்போது விமான நிலையங்களில் அவசர அவசரமாக அமெரிக்காவில் சொந்த ஊர் திரும்ப சென்று கொண்டிருக்கின்றனர். அனைவருக்கும் விமானம் கிடைக்குமா என்பதும் ஒரு கேள்வி. ஏனெனில் சில விமானங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளன.

ஜெர்மனியில் பவேரியா, சார்லாண்ட் ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் சில மாநிலங்கள் திங்கள் தொடங்கி பள்ளிகள், பொது இடங்கள் மூடப்பட உள்ளன.

கொரோனா வைரஸ் வெகு வேகமாகப் பரவுவதால் வெளியில் உலவுவதிலிருந்து தடுத்து வீட்டிலேயே இருப்பதால் வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்க முடியும் என்பது ஜெர்மனி மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்தாகவும் உள்ளது.

ஒட்டுமொத்தமாக கொரோனா ஏற்படுத்தத் தொடங்கியிருக்கும் பொருளாதார பாதிப்பிற்கு ஈடு செய்யும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார ஆதரவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செய்து கொடுக்க திட்டமிட்டு வருகின்றது.

இன்றைய நிலையில் பொதுமக்கள் முடிந்த அளவு வீட்டிலேயே இருப்பது பெருமளவில் இந்த வைரஸ் வேகமாகப் பரவுவதைத் தடுக்கும்.

-சுபா

Monday, March 9, 2020

வெற்றி மணி - புதுமைப் பெண்கள் நிகழ்ச்சி

வெற்றி மணி - புதுமைப் பெண்கள் நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடக்கி வைக்கின்றேன்.
ஜெர்மனி , ஊப்பர்டால்




சபேசனின் குறும்படம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி ஊப்பர்டால் நகரில் நடைபெற்ற வெற்றிமணி இதழின் பெண்கள் தின விழாவில் பல சிறப்பு அம்சங்கள் இருந்தன. அதில் ஒன்றாக இடம்பெற்ற குறும்படம் ஒன்று என் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைக்குள் ஆழப் புதைந்து கிடக்கும் பெண் ஒடுக்குமுறை சார்ந்த ஒரு விஷயத்திற்கு மாற்று சிந்தனையைக் கொண்டுவரும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு குறும்படம் அது.

இளம் வயதில் கணவனை இழந்த தனது தாயாருக்கு மகளே அவர் ஒரு திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்து மகிழும் வகையில் அமைந்த ஒரு குறும்படம்.
அதில் ஒரு காட்சி என் கவனத்தை ஈர்த்தது..

பழைய சிந்தனைகளைப் புறக்கணித்து மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி நெற்றி நிறைய திருநீறு.. கையில் ஈவேரா பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூல்...

குரும்படத்தின் இயக்குனர் சபேசன் வி. . இயக்குனருக்கும் மேலும் இப்படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நல்வாழ்த்துகள்.

தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் கலைத் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் இத்தகைய குறும்படங்கள் மென்மேலும் பல வெளிவர வேண்டும்.
-சுபா




Sunday, March 8, 2020

ஜெர்மனி ஊப்பர்டால் நகரில் வெற்றிமணி மகளிர் தின விழா

 கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி ஊப்பர்டால் நகரில் வெற்றிமணி பத்திரிக்கையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மகளிர் தின விழா மற்றும் அன்னை நவநிதி சுப்பிரமணியன் நூற்றாண்டு விழாவில் மங்கள விளக்கேற்றி வைத்தபோது..