Sunday, September 8, 2019

ஜெர்மனி சுவேபியன் யூரா (Swabian Jura)- தொல்லியல் தடையங்களும் பயணமும் - 7

ஜெர்மனியின் காடுகளில் குகைக்களைத் தேடிச் செல்லும் பயணம் இன்றும் தொடர்ந்தது.. இங்கே குளிர் இன்று 12 டிகிரி செல்சியல் அளவு குறைந்துள்ளது. மழை மெலிதான தூரல். ஆயினும் காடுகளையும் குகைகளையும் பார்க்கும் ஆவல் குறையவில்லை.
இன்று நான் சென்ற குகைப்பகுதி ஃபோகல்ஹெர்ட் என்ற 100,000 ஆண்டு மனிதர்கள் வாழ்ந்தமைக்குச் சான்றாக அமையும் ஒரு தொல் பழங்கால, கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைப்பகுதி. நியாண்டர்தால் மனிதர்கள் வாழ்ந்ததற்கானச் சான்றுகளும் பின்னர் ஹோமோ செப்பியன் இனமும் எனப் பல சான்றுகளைக் கொண்டிருக்கும் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் ஒரு தொல்குகைப்பகுதி இது. விரிவான விளக்கங்களை பின்னர் வழங்குகிறேன்.























Friday, September 6, 2019

ஜெர்மனி சுவேபியன் யூரா (Swabian Jura)- தொல்லியல் தடையங்களும் பயணமும் - 6

கீழடி தொல்லியல் களத்தை ஆரம்பத்தில் ஒரு ஆசிரியர் தான் அடையாளம் காட்டினார். அதுபோல ஜெர்மனியின் சுவேபியன் யூரா பகுதியில் உள்ள பேரன்ஹூல (Bärenhöhle) என்ற இக்குகைப் பகுதியை முதலில் கண்டு அடையாளப்படுத்தியவர் ஒரு ஆசிரியர் தான். திரு.ஃபௌத் (Fauth) என்ற ஆசிரியர் மூலிகைகள் தேடி காடுகளுக்குள் சென்ற போது இதனைக் கண்டிருக்கின்றார். இவரின் நினைவாக ஃபௌத் குழி (Fauthsloch) என இவரது பெயருடன் குகையின் ஒரு பக்க வாயில் பகுதி அழைக்கப்படுகின்றது.
அடர்ந்த காடுகளுக்கு இடையே இந்தப் பகுதி அமைந்துள்ளது. ரோய்ட்லிங்கன் நகரின் மையப் பகுதியைக் கடந்து மேலும் பயணித்தால் சாலையின் இருபக்கமும் அடர்ந்த காடுகளைக் காணலாம். படிப்படியாக பயணம் மலையை நோக்கியதாக அமைகிறது. வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை. கோடைகாலம் என்பதால் பசுமை கண்களுக்கு விருந்து. குகைக்கு ஏறக்குறைய 1 கிமீ தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திச் செல்ல இடம் வைத்திருக்கின்றார்கள்.

முந்தைய காலத்தில் இக்குகைக்குள் ப்ளேக் நோய் வந்தோரைத் தூக்கிப் போட்டு விடுவார்களாம். ஒருவருக்கு பிடித்த நோய் மற்றவர்களுக்கும் தொற்றிவிடக்கூடாது என்பதற்காக இபப்டி நடந்ததாக ஒரு செய்தியும் உள்ளது.
பேரன்ஹூல என்பதை தமிழ்ப்படுத்தினால் கரடி குகை எனப் பொருள் கொள்ளலாம். இங்கு கரடிகள் நடமாட்டம் நிறைந்திருப்பதாலும் இக்குகைப்பகுதியில் கரடிகள் வந்து செல்வது முன்னர் இயல்பான ஒன்று என்பதாலும் இந்தக் குகைக்கு இப்பெயர் நிலைத்து விட்டது. குகைக்குள் இறந்து போன ஒரு கரடியின் முழு எலும்புக் கூடு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த பதிவுகளில் நான் விளக்கமளித்த மூன்று குகைகளைப் போலல்லாது இந்தக் குகையில் முழுமையாக ஸ்டெலெக்டைட் வடிவங்கள் நிறைந்துள்ளன. ஸ்டெலெக்டைட் என்பது ஒரு இயற்கை செயல்பாடு. சுண்ணாம்புக்கல் குகையில் நீர் கோர்த்து அது சொட்டு சொட்டாக வடியும் போது அது பல்வேறு வடிவங்களாக வடிவெடுத்து இருகிக்காட்சியளிக்கும். இந்தக் குகை முழுமைக்கும் இப்படி இயற்கையாக உருவான ஸ்டெலெக்டைட் வடிவங்கள் நிறைந்திருக்கின்றன.

பூமியில் தான் இருக்கின்றோமா அல்லது வேறு கோளத்தில் நடந்து கொண்டிருக்கின்றோமா என நம்மை வியக்க வைக்கும் வகையில் உள்ளே ஸ்டெலெக்டைட் வடிவங்கள் பிரமிக்க வைக்கின்றன. இதற்கு மேலும் மெருகூட்டும் வண்ணம் ஆங்காங்கே வண்ண விளக்குகளை வைத்திருக்கின்றார்கள். அது பிரம்மாண்டமான உணர்வையும் அனுபவத்தையும் நமக்கு வழங்கத் தவறுவதில்லை.






















இந்த பேரன்ஹூல குகையைப் போல 5 மடங்கு பெரிய குகைக்கு அடுத்து சென்றேன். அதை பற்றிய விபரம் அடுத்த பதிவில் காண்போமா..?
குகைகளைத் தேடிச் செல்லும் பயணம் தொடரும். .-சுபா

Wednesday, September 4, 2019

ஜெர்மனி சுவேபியன் யூரா (Swabian Jura)- தொல்லியல் தடையங்களும் பயணமும் - 5

பொதுவாகவே பண்டைய மக்கள் வாழ்விடப்பகுதியாக அடையாளம் காணப்படும் குகைகள் நமது கண்களுக்குச் சுலபமாகத் தென்படும் இடங்களில் இருக்குமென நாம் நினைத்து விடக்கூடாது. பெரும்பாலான குகைகள் காடுகளுக்குள்ளும், புதர் அடர்ந்த பகுதிகளிலும் தான் அமைந்திருக்கும். சில குகைகளை நன்கு அடையாளப் படுத்தி குறியீடுகள் அமைத்து வைத்திருப்பார்கள். ஒரு சில குகைகளோ அவற்றை தேடிச் சென்று அடைவது பெறும் சவாலாகத்தான் இருக்கும். அப்படி ஒரு குகைதான் சிர்கன்ஸ்டைன் குகை (Sirgenstein Cave).
ஆஹ் நதிக்கரையில் அமைந்துள்ள குகை இது. தொல்லியல் அறிஞர் R.R.Schmidt இப்பகுதியை 1906ம் ஆண்டில் முதல் அகழாய்வு செய்தார். நியோலித்திக், பாலியோலித்திக் கால அடையாளங்களை அவரது இப்பகுதிக்கான ஆய்வு புலப்படுத்தியது. 1910ம் ஆண்டில் அவர் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டார். எனது முந்தைய பதிவுகளில் நான் குறிப்பிட்ட ஏனைய முதல் இரண்டு குகைகளான ஹேலெஃபெல்ஸ் (Hohle Fels) மற்றும் கைசன்க்ளோஸ்டெர்ல (Geissenklösterle) குகைகளுக்கு அருகிலேயே இது உள்ளது.
வாகனத்தில் ஜிபிஎஸ் செட் செய்து இப்பகுதிக்கு வந்து சேர்ந்தேன். ஆனால் இக்குகை இருப்பதற்க்கான அடையாளம் ஒன்றையும் காணவில்லை. இங்கிருக்காதோ என மீண்டும் காரை எடுத்துக் கொண்டு தேடத் தொடங்கினேன். அருகில் சாலையில் மலையில் நடப்பவர்களைப் பார்த்து நிறுத்தி விசாரித்தேன். ஓரிருவர் கொடுத்ததகவலைக் கொண்டு முதலில் வந்து சேர்ந்த இடத்துக்கே வந்து பார்த்தால் காட்டில் ஒரு ஒற்றை வழிப்பாதை. அதில் நடந்து சென்றால் குகையை அடையலாம் என்று தோன்ற, நடந்து சென்றேன். சற்று தூரத்தில் அடையாளம் தெரிந்தது. குகையையும் பார்க்க முடிந்தது.
ஒரு பெரிய சுண்ணாம்புக் கற்பாறை. அதன் நுழைவாயிலில் இக்குகை அமைந்துள்ளது. முதலில் பார்க்கும் போது நமது கண்களுக்குப் பழகிப் போன குடைவரைக்கோயில்கள் தான் நினைவுக்கு வந்தன. உள்ளே குகை 6 மீட்டர் அகலமும் ஏறக்குறைய 40மீட்டர் நீளமும் கொண்டுள்ளது.
இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் வெவ்வேறு காலகட்டத்தைச் சார்ந்த இனக்குழுக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கும் சாத்தியங்களை சான்றுகாட்டுகின்றன. பேலியோலித்திக் காலகட்டத்தில் வாழ்ந்த மெக்டலேனியன் இனக்குழு மக்கள் இங்கு வாழ்ந்தனர் என்பதை அறிக்கை கூறுகிறது. மெக்டலேனியன் இனக்குழு மக்கள் என்போர் மேற்கு ஐரோப்பாவின் ஏறக்குறைய 17,000லிருந்து 12,000 ஆண்டுகள் காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள். நாடோடிகளாக காட்டு விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த மனித இனம் இவர்கள்.
இதற்கு அடுத்து செய்யப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வில் கிடைத்த சான்றுகள் மனித இனத்தின் செயல்பாடுகள், நடமாட்டம் ஆகியவற்றைக் காட்டும் ஏறக்குறைய 35,000லிருந்து 50,000 ஆண்டுகள் காலத்திலான நியாண்டர்தால் வகை மனித இனத்தின் செயல்பாடுகளைக் காட்டுகின்றன. அவற்றுள் நியாண்டர்தால் நெருப்பு எரியூட்டும் பகுதி, எலும்புகள், கற்கருவிகள், குதிரைகளின் எச்சங்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. பெரும்பாலும் இப்பகுதிக்கு வந்த மனித இனம் குளிர்காலங்களில் மட்டும் இங்கு வந்து தங்கியிருக்கலாம் என்பது R.R.Schmidt அவர்களின் ஆய்வறிக்கை கருத்தாகவும் அமைகிறது.
சுவேபியன் யூராவின் ஆஹ் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மூன்று குகைகளைப் பற்றி இதுவரை விளக்கி விட்டேன். இனி வரும் பதிவில் அடுத்த குகைகளைக் காண அழைத்துச் செல்கிறேன்.




















தொடரும்...
சுபா