Friday, January 18, 2013

பனியிலும் ஒரு அனுபவம்


பல விஷயங்கள் நாம் விரும்புகின்றோமோ விரும்பவில்லையோ நடந்தேவிடுகின்றன. ஆனால் எல்லாவற்றிலுமே புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றேன் என்றே எப்போதும் நான் நினைக்கின்றேன். அனுபவங்கள் தானே வாழ்க்கையில் விலை மதிக்க முடியாத விஷயங்களாக அமைகின்றன.

நேற்று மட்ரிட்டிலிருந்து ஸ்டுட்கார்ட் திரும்ப வேண்டும். எனது விமான பயணம் மட்ரிட்டிலிருந்து மூன்ஷன் பின்னர் மூன்ஷனிலிருந்து ஸ்டுட்கார்ட் என்பதாக அமைத்திருந்தேன். மதியம் 2:45க்கு தயாராகவேண்டிய முதல் விமானம் அடர்ந்த பனியினால் தாமதப்படுத்தப்பட்டு 5 மணிக்குத்தான் புறப்படும் என்று கூறிவிட்டனர். முதல் விமானம் சரியான நேரத்திற்குச் சென்றால் தான் நான் 2வது கனெக்டிங் ப்ளைட்டை எடுக்க முடியும். அது முடியாது என்றாகி விட்டது. Lufthansa  எனக்கு கனெக்டிங் ப்ளைட்டை மாற்றி கொண்டோர் நிறுவனத்தைத் தொடர்வு கொண்டு 9 மணிக்கு மூன்ஷனிலிருந்து ஸ்டுட்கார்ட் புறப்படும்  ஒரு விமானத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

5 மணிக்காவது புறப்படுமா என காத்திருந்தால் அதிலும் தாமதம். மூன்ஷனிலிருந்து சிக்னல் வராததால் விமானத்தை எடுக்க முடியவில்லை. 6:10க்கு ஒரு வழியாக விமானத்தை எடுத்தனர். 2 மணி 10 நிமிட பயணம்.  ஆனால் மூன்ஷன் வந்தடையும் போது விமானம் இறங்க Terminal 2ல் இடம் கிடைக்கவில்லை. ஆக விமானம் வானத்திலேயே 40 நிமிடம் மீண்டும் பறந்து இறுதியில் வந்து இறங்கும் போது 9:15.  அதிலும் இறங்குவதற்கும் இடமே கிடைக்காமல் எல்லா இடங்களிலும் பனி கொட்டி கிடந்ததால் இந்த விமானத்தை கார்கோ விமானம் வந்திறங்கும் இடத்தில் இறக்கினர்.



எனது கனெக்டிங் ப்ளைட் 9 மணிக்கானது அதற்குள் போய்விட்டது. நான் மட்டுமல்ல என்னைப்போல  ஏறக்குறைய 9000 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர் . நான் விமான நிலையம் வந்து பார்த்தால் கனெக்டிங் ப்ளைட் உதவி கேட்டு ஒரு நீண்ட வரிசை. Lufthansa ஊழியர்கள் 20 பேருக்குமேல் அவர்களைக்  கவனித்து தண்ணீர் வழங்கி புதிய விமானப் பயணத்தைத் தேடி உறுதி செய்து உதவிக் கொண்டிருந்தனர்.

எனக்கு இரண்டு வழிகள் தான் இருந்தன ஸ்டுட்கார்ட் திரும்ப.
1. மறுநாள் அதாவது இன்று காலை தயாராகும் ஏதாவது ஒரு விமானத்தில் ஸ்டுட்கார்ட் வரலாம் ஆனால் எத்தனை மணிக்கு அது அமையும் என்று தெரியாது.
2.ரயில் எடுத்து ஸ்டுட்கார்ட் வந்து விடலாம்.

வரிசையில் 10 நிமிடம் நின்று பார்த்தேன். மனம் கேட்கவில்லை. ஏதாவது செய்வோமே என வரிசையிலிருந்து விலகி முன்னே சென்று அங்கு நின்று கொண்டிருந்த ஒரு   Lufthansa ஊழியரை அணுகினேன்.

அவரைச் சுற்றி சில பேர் நின்று அவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு கேட்டுக் கொண்டு இருந்தனர். என் முறை வந்தபோது என் நிலையைச் சொன்னேன். அவர் இன்றே நான் ஸ்டுட்கார்ட் திரும்ப வேண்டுமா எனக் கேட்க ஆமாம் என்றேன். உடனே தன் மோபைல் போனில் ரயில் தொடர்பை பார்த்து சரி.. 10க்கு ஒரு ரயில் விமான நிலையத்திலிருந்து மத்திய ரயில் நிலையம் செல்கின்றது. அதில் ஏறினால் 10:50க்கு அங்கிருந்து செல்லும் ரயிலில் ஏறி இரவு/காலை 1:10க்கு ஸ்டுட்கார்ட் ரயில் நிலையம் வந்து விடலாம் என்றார். சரி என்று கடிகாரத்தைப் பார்த்தால் மணி 9 33.

உடனே எனது விமான டிக்கட்டை ரயில் டிக்கெட்டாக மாற்றும் முயற்சியை செய்ய வேண்டும். அதற்கு இன்னொரு இடம் போக வேண்டும். அவர் உடனே என்னை தன்னுடன் அழைத்துக் கொண்டு வேகமாக வரும்படி சொல்லி அழைத்துச் சென்றார். அங்கு சென்றால் அங்கேயும் பலர் வரிசையில். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்காக  அந்த கவுண்டரில் இருந்த Lufthansa ஊழியரை அனுகி எனக்கு உடனடி உதவி தேவை எனச் சொல்லி முயற்சித்தார். ஆனால் ..கம்பியூட்டரில் அப்போது பிரச்சனை ஏற்பட எனக்கு வவுச்சர் தர அந்த Lufthansa ஊழியரால் முடியவில்லை.

உடனே அவரே முடிவு செய்தார். வவுச்சர் வேண்டாம். நேராக ரயிலில் சென்று ஏறி விடுங்கள். பிரச்சனை இருந்தால் விவரத்தை சொல்லுங்கள். பணம் கட்டும்படி அமைந்தால் பணம் கட்டி புதிய டிக்கட் வாங்கி விட்டு அதனை நாளை ரீ இம்பர்ஸ் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு எனது பையையும் எடுத்துக் கொண்டு என்னுடன் ரயில் நிலையத்திற்கு விரைந்தார். அங்கிருந்த விரைவு வண்டியில் ஏற்றி விட்டு மத்திய ரயில் நிலையத்தில் இறங்கி ப்ளாட்பார்ம் 23ல் ஸ்டுட்கார்ட் செல்லும் ரயிலை பிடிக்கச் சொல்லி விடை கொடுத்தார்.

எனக்கு அந்த அசதியிலும் ஆச்சரியம். மனித  ரூபத்தில் தெய்வம் என்று சொல்வோமே.. அப்படி.. இனம் மொழி கடந்த தேசங்களிலும் மனித நேயம், ஒருவருக்கு ஒருவர் உதவுதல் என நல்ல உள்ளங்களை அவ்வப்போது நான் பார்க்கின்றேன். அதில் நேற்று இப்படி ஒரு அனுபவம்.

இந்த ரயில் 10:37க்கு வந்து  சேரவேண்டும். துரதிர்ஷ்டம். 10:58க்கு தான் மூன்ஷன் மத்திய ரயில் நிலையம் வந்தது இந்த ரயில். இங்கேயும் சோதனையா என நினைத்துச் சென்றால் நான் போக வேண்டிய ரயில் நின்று கொண்டிருந்தது.  பனி கொட்டி தண்டவாளம் நிரம்பிய பிரச்சனையால் ரயில்களின் வருகை தாமதிக்கப்பட அக்காரணத்தால் இந்த நிலை. இந்த  சூழலிலும் ஒரு நல்லது நடந்திருக்கின்றது என்று மனதிற்குள் எனக்கு சந்தோஷம்.

உள்ளே அமர்ந்து சற்று நேரத்தில் ரயில் புறப்ப ட்டது. டிக்கட் பரிசோதிக்கும் அதிகாரி வர அவரிடம் என் நிலையை தெரிவித்தேன். பொதுவாக  ஜெர்மனியில் டிக்கட் பரிசோதிக்கும் அதிகாரிகள் எந்த காரணங்களையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனக்கு நேற்று அதிர்ஷ்டம் இருந்திருக்கின்றது. என்னிடம் மிக அன்பாகப் பேசி கவலையே வேண்டாம். இந்த விமான டிக்கட்டே போதும் என்று சொல்லி விட்டார். உங்களை பாதியில் எங்கும் இறக்கிவிடமாட்டேன். கவலைப்படாமல் இருங்கள் என்று சொல்லி புன்னகை செய்து விட்டு சென்றார் அந்த மனிதர். மீண்டும் மனித வடிவில் தெய்வம்.

ஸ்டுட்கார்ட் ரயில் நிலையம் வந்து சேர மணி காலை 2:50 ஆகிவிட்டது. எனது வாகனத்தை நான் ஸ்டுட்கார்ட் விமான நிலையத்தில் வைத்திருந்தேன். ஆக என் வாகனத்தை எடுத்துக் கொண்டே வீடு போய்விடலாமே.. அதற்கு டாக்ஸி வந்தால் நன்றாக இருக்குமே என நினைக்கையிலேயெ ஒரு டாக்ஸி வந்தது. அதில் ஏறிக் கொண்டு ஸ்டுட்கார்ட் விமான நிலையம் போகச் சொன்னேன். டாக்ஸி ஓட்டி வந்தவர் ஒரு பாக்கிஸ்தானியர். என்னுடன் கொஞ்சம் கதை பேசிக் கொண்டே வந்தார். 25 நிமிடத்தில் விமான நிலையத்தில் என் வாகனம் இருக்கு மிடம் வந்து சேர்ந்தேன். அந்த  மனிதரும் டாக்ஸி ஓட்டி என்றில்லாமல் நான் பார்க்கிங் காசை கட்டி விட்டு பனியை காரிலிருந்து சுத்தம் செய்து காரில் ஏறும் வரை காத்திருந்து பின்னர் கையசைத்து பை சொல்லி விட்டு புறப்பட்டார்.  மீண்டும் மனித  வடிவில் தெய்வம்.

வீடு வந்து சேரும் போது காலை 3:15 ஆகியிருந்தது.

மூன்ஷனில் நேற்று இரவு மட்டும் 160 விமானங்கள் தடை செய்யபப்பட்டிருந்தன. ஆக எத்தனை பயணிகள் என்னென்ன சிரமத்திற்குள்ளானார்களோ.. எப்படி சமாளித்து வீடு சேர்ந்தார்களோ என்ற நினைப்பே எனக்கு மனதில் இன்று காலையில்.



இன்றும் பனி கொட்டிக் கொண்டிருக்கின்றது. பனியில் விமான நிலயத்தை சுத்தம் செய்யும் ஊழியர்களாகட்டும் விமான கம்பெனிகளின் ஊழியர்களாகட்டும்.. இம்மாதிரியான ச்=சூழலில் அவர்களது சேவை பாராட்டுதற்குறியது. இன்று காலை Lufthnsa வலைப்பக்கத்தில் எனது நன்றியை தெரிவித்து சிறு கடிதம் அனுப்பினேன். மனதிற்குள் அவர்களை நினைத்து பெறுமிதமும் மகிழ்ச்சியும் கொண்டேன்.

சுபா

No comments:

Post a Comment